இலங்கையில் இராணுவ தளத்தை அமைக்க சீனா திட்டம்: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story News updates 14.03.2024

இலங்கையில் இராணுவ தளத்தை அமைக்க சீனா திட்டம்

இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ தளங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது என்றும் அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாண்டின் அரச வெசாக் விழாவை மாத்தளையில் நடத்த தீர்மானம்

இவ்வாண்டின் அரச வெசாக் விழா மாத்தளை மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (14) மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் மின்சார முச்சக்கர வண்டிகள்

இலங்கையில் முதற்தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் Vega நிறுவனத்தின் ELEKTRATEQ முச்சக்கர வண்டியின் முழு உற்பத்தி செயல்முறையும் இந்த உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.

பெலியத்தை துப்பாக்கிச்சூடு - கைதான 11 பேருக்கும் விளக்கமறியல்

பெலியத்தை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். நாட்சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை பெறமுடியும் – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு பிணை மறுப்பு ; வழக்கு முடிவடையும் வரை விளக்கமறியல்

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு இன்று (14) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க நீதவான் மறுப்புத் தெரிவித்துள்ளார். வழக்கு முடியும் வரை கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர்கள் 4 பேருக்கு பிணை வழங்க முடியாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பெரும்போக நெல் கொள்வனவுக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 50 கோடி ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், நாளை (15) முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு நெல் களஞ்சியசாலைகள், நெல்லை கொள்முதல் செய்வதற்காக திறக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் தேசிய மக்கள் சக்தி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பற்றிய இதன்போது இருதரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

OruvanOruvan

இரயில் ஆசன முன்பதிவு இன்று முதல் நிகழ்நிலையில் மாத்திரம்

இரயில் ஆசன முன்பதிவு நடவடிக்கை இன்று (14) முதல் முழுமையாக நிகழ்நிலை மயப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காலை 7 மணி முதல் ஆசன முன்பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்களை வழங்கிய சீனா

சீன இராணுவ மானியத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கப்பட்டடன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, சீன தூதுவர் கியூ சென்கொங் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் காசநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள காசநோயாளர்களின் எண்ணிக்கையில் 14 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 2035 ஆம் ஆண்டுக்குள் காசநோயாளர்களின் எண்ணிக்கையை 90 வீதத்தினாலும் இறப்பு எண்ணிக்கையை 95 வீதத்தினாலும் குறைக்க வேண்டுமென சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் நிசாயா காதர் தெரிவித்துள்ளார்.

பரேட் சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து சொத்துக்களைப் பெறுவதற்கும் அவற்றை ஏலம் விடுவதற்கும் நிதி நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கிய பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம், எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி வரை சொத்து கையகப்படுத்தல் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அரசாங்கத்தில் இணைவதை தவிர வேறு வழியில்லை

பலம் இழந்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு அரசாங்கத்தில் இணைவதே ஒரேயொரு தெரிவு இருப்பதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அக்கட்சியின் சில தலைவர்கள் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணிடம் கொள்ளை

ஓமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை செய்துவிட்டு இலங்கை திரும்பிய பெண்ணை ஏமாற்றி அவரிடமிருந்த சுமார் பன்னிரெண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் உடைமைகளை அபகரித்துச் சென்ற நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு திகதி குறிப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 20 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி துறையினருக்கு நிவாரணம்

மீன்பிடித் தொழிலுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் ஐஸ் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

OruvanOruvan

உணவு விசமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்

நமுனுகுல கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உணவு விசமானதில் 9 மாணவர்கள் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு முதல் ஐந்தாம் தரங்களுக்கு இடைப்பட்ட வகுப்புகளில் கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். 3 மாணவிகளும் 6 மாணவர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு விசமானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசேட கட்சித் தலைவர் கூட்டம் இன்று

விசேட கட்சித் தலைவர் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வு தொடர்பான விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தரையிறங்கிய அமெரிக்க உளவு விமானம்

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700 Bombardier உளவு விமானம் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளது. குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையிலும் கடல் எல்லையை கண்காணிப்பது தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

மீரிகம – குருணாகல் மத்திய அதிவேக வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

புனரமைப்பு பணிகளுக்காக ஒரு கிலோமீற்றர் வரையான தூரத்திற்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கஹபிட்டிய தெரிவித்துள்ளார்.அதற்கமைய, மீரிகம – குருணாகல் மத்திய அதிவேக வீதியின் 56ஆவது கிலோமீற்றர் முதல் 57ஆவது கிலோமீற்றர் வரையான பகுதியிலேயே இந்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மாணவர்களின் உளநலம் விசேட கவனத்திற்குரியது - கல்வி இராஜாங்க அமைச்சு

பாடசாலை மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு உளவியல் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்தல் போன்ற வேலைத்திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும், கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களை இலக்காகக் கொண்டு இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் கைது

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.டி சுதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை, இடம்கொட பகுதியில் இன்று(14) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் பசில்

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ,. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா வை சந்தித்து கலந்துரையாடினார்.

OruvanOruvan

அதிரடியாக குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 350 ரூபாயிலிருந்து 285 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் சமீபத்திய தீர்மானம்

அடுத்த வருடம் முதல் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை புரிந்து கொள்ளாமல் அதிகாரத்தை பெறுவதற்காக வழங்கிய அரசியல் வாக்குறுதிகளினால் மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அங்கு தெரிவித்தார். அந்த தவறை செய்ய நான் தயாராக இல்லை என்று கூறினார்.

பால் மாவின் விலை குறைக்கப்படுகிறது!

எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, நாளை முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்படவுள்ள அதிவேக போக்குவரத்து!

புனரமைப்பு பணியின் காரணமாக மீரிகம - குருணாகல் மத்திய அதிவேக வீதியின் 56ஆவது கிலோமீட்டர் முதல் 57ஆவது கிலோமீட்டர் வரையான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கஹபிட்டிய தெரிவித்துள்ளார்.

புகையிரத பாதை நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

மஹோ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான புகையிரத பாதை நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக IRCON நிறுவனத்திற்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. சுமூகமான அபிவிருத்தி செயல்முறையை உறுதி செய்வதற்காக எழுந்துள்ள கவலைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

OruvanOruvan

குற்றச்செயல்கள் இடம்பெறாதவகையில் செயற்படுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை

கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மீன்பிடித் தொழிலுக்கு நவீன முறையிலான புதிய ஆழ்கடல் கப்பல்

மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டா தப்பிச் செல்ல நாங்கள் தான் உதவினோம்- ஓமல்பே சோபித தேரர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டுத் தப்பித்துச்செல்வதற்கு தான் உதவியதாக பெளத்த தேரரான ஓமல்பே சோபித தெரிவித்துள்ளார். தாம் கோட்டாபயவை ஒருபோதும் எதிர்க்கவில்லை எனவும் நடைமுறையில் உள்ள அரசியல் கட்டமைப்பையே எதிர்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போலி வாக்குறுதிகளுக்கு ஜனாதிபதி வல்லவர்- மரிக்கார் விமர்சனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, போலி வாக்குறுதிகளை வழங்குவதில் வல்லவர் என்பதுடன் வாக்குறுதிகள் நிறைவேற்ற எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் விமர்சித்துள்ளார். கொழும்பில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு நெருக்கமானவர் போதைப்பொருளுடன் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளருக்கு நெருக்கமான நபரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் இன்று வியாழக்கிழமை ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இணையத்தள குற்றச் செயல்கள் அதிகரிப்பு

இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.