நானுஓயாவில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனை: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - local

நானுஓயாவில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனை

நானுஓயாவில், 16 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால் 10 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவித்துள்ளது. இதுவரை தலைவராக செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, இன்று முதல் அந்த பதவியில் இருந்து விலகுவதாகவும் புதிய தலைவர் நாளை முதல் கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

வஜிர அபேவர்த்தனவின் நிகழ்வில் கலந்து கொண்ட மைத்திரி

ஐ.தே.க. தவிசாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன, காலி, உடுகமை ஶ்ரீ மகா போதிராஜ விகாரையில் ஏற்பாடு செய்த பௌத்த மத நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் கலந்து கொண்டுள்ளார்

பின்வாங்கிய பசில் ராஜபக்‌ச

எதிர்வரும் ஏப்ரல் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதில் பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். என்றாலும் தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் 10 லட்சம் தொழில்வாய்ப்புகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் ஒரு மில்லியன் புதிய தொழில்களை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். பொருளாதாரம் விரிவடையும் என்பதுடன், பணப்புழக்கமும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மூத்த ஊடகவியலாளர் அசோக திலகரத்ன காலமானார்

மூத்த ஊடகவியலாளர் அசோக திலகரத்ன காலமானார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட காலம் ஊடகவியலாளராகப் பணியாற்றிய அவர், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகளை வழங்கிய மூத்த ஊடகவியலாளராவார்.

தென்கொரியாவில் இலங்கை மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு

அண்மையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்த தென்கொரிய தூதுவர் மியோன் லீ, இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வியை தொடர்வதற்கு அதிக வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருள்

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின், 7 கிலோ கிராம் கேரள கஞ்சா, போதைப்பொருள் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களையும், அவற்றை பதப்படுத்த பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தரம் 8 பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறி அறிமுகம்

தரம் 8 மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளின் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் செயற்கை நுண்ணறிவையும் இந்த பாடத்தில் சேர்க்க உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கனேடிய தூதுவரை சந்தித்த அனுர

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வொல்ஷ், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளார்.இருதரப்பு சந்திப்பின் போது தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

OruvanOruvan

தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி வழங்கப்படும்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மாத்திரமன்றி அதன் பின்னரும் நாட்டில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெடுக்குநாறிமலை சம்பவம்- விசேட விசாரணை குழு

வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

முட்டை கொள்வனவு தொடர்பான அறிவிப்பு

லங்கா சதொசவில் இன்று (13) முதல் வரம்புகள் இன்றி முட்டை ஒன்றினை 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த சலுகை ஏப்ரல் 13 வரை செல்லுபடியாகும்.

பாட்டி கொடுத்த மாத்திரை தொண்டையில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வெப்பம் அதிகரிப்பு - நீர், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த கோரிக்கை

அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொள்கின்றன. கடுமையான வெப்பம் காரணமாக முன்பை விட மக்கள் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தப் பழகிவிட்டதால் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் திட்டம்

மாகாண பாடசாலைகளை எதிர்வரும் காலங்களில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியக் குழு CEB, CPC செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) செயற்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்புகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் செவ்வாய்கிழமை (11) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் கலந்துரையாடலை நடத்தினர்.

OruvanOruvan

IMF delegation reviews progress of CEB, CPC operations

டயானா கமகே தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியில் தனது உறுப்புரிமையை நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை மீண்டும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

வறட்சி காரணமாக அதிக நீர் தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் அதிகமான வறட்சி காரணமாக நீர் பாவனையானது 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டுநிலப் பகுதிகள், நீர் விநியோகக் கட்டமைப்பின் முடிவிடங்களில் வாழும் மக்களுக்கு குறைந்த நீரே விநியோகிக்கப்படுகிறது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

புதிய களனி பாலத்துக்கருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிராண்பாஸ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புதிய களனி பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் கிராண்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

OruvanOruvan

Dead body identify in Kelaniya

விலையை கட்டுபடுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் ரோஸ் வெங்காயம்

அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்திற்கான விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், ரோஸ் வெங்காயம் (ROSE ONION) என அழைக்கப்படும் வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். புறக்கோட்டை மொத்த வர்த்தகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

OruvanOruvan

நாட்டின் முக்கிய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை

நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்க்கட்சி பலவீனம்; தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரிப்பு - ஹரின்

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளமை எதிர்க்கட்சியின் பலவீனம் காரணமாக இருக்கலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்க்கட்சியின் செயல்திறனில் நிச்சயமற்ற தன்மை நிலவியதால், மூன்றாம் தரப்பினரின் தோற்றம் முக்கியத்துவம் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, வருடாந்தம் ஐநூறு பேர் வரையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவுள்ளனர். அத்துடன், மாணவர்களின் வசதிக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வருடாந்தம் நூறு கோடி ரூபா செலவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக மாதாந்தம் எட்டுக் கோடி ரூபா செலவிடப்பட்டு வரும் நிலையில், வருடாந்தம் சுமார் நூறு கோடி ரூபா செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. அத்துடன், ஏனைய கொடுப்பனவுகள், தொலைபேசி மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை சேர்க்கும் பட்சத்தில் குறித்த தொகை மேலும் அதிகரிக்கும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்பநிலை தொடர்பில் மீண்டும் அறிவுறுத்தல்

அதிக வெப்பநிலை காரணமாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், வெளிப்புற நடவடிக்கைகளின் போது எவ்வாறு கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் குறித்த அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் புறக்கணிப்பதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாத்தறையில் பெருமளவு போதைப்பொருளுடன் மூவர் கைது

மாத்தறையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோள்மண்டலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது

கோள்மண்டலம் இன்று (13) முதல் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்படுவதாக கல்வி அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கோள்மண்டலம் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.