எதிர்க்கட்சியின் வேலைத்திட்டங்களால் ஜனாதிபதி அச்சமடைந்துள்ளார்: ஜனாதிபதி தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும்-ஜீ.எல்.பீரிஸ்
எதிர்க்கட்சிகளின் வெற்றிகரமான வேலைத்திட்டம் காரணமாக ஜனாதிபதி அச்சமடைந்திருப்பது குளியாப்பிட்டிய பொதுக்கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த ஆண்டு தேசிய ரீதியான தேர்தல்கள் நடைபெறும். அதற்கான நிதி இல்லை எனக்கூறி தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் இடமளிக்காது.
ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்யும் போது, ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என தெரிவித்தார்.
இதன் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடமும்,பொதுத் தேர்தல் அடுத்த வருடமும் நடைபெறும் என ஜனாதிபதி செயலகம் கூறியது.
எந்த தேர்தலை ஒத்திவைத்தாலும் சட்டப்படி ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது.
ஜனாதிபதி தேர்தலை கட்டாயம் நடத்தியாக வேண்டும். இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.