சிங்கள வாக்கிற்காய் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசியம்: இனரீதியான விரிசலை தொடர்ந்தும் தக்கவைக்க முயற்சி

OruvanOruvan

Lawyer Manivannan

ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நகர்வுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுவருவதாக யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளை நடத்தவிடாமல் பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை,தென்னிலங்கை வாக்குகளை பெற இனவாத தீயினை மூட்டுவதற்கான முன்னேற்பாடாக நோக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் அடாவடித்தனத்துக்கு பின்னால் ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து வாக்குகளை பெற தென்னிலங்கை முயற்சிக்கின்றதா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளை நடத்த விடாமல் பொலிஸார் அராஜகம் புரிந்தமைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று (11) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டிடமான வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் விளங்குகின்ற நிலையில் அதனை முழுமையான பௌத்த பூமியாக மாற்றுவதற்கு அரச இயந்திரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கை அரசியலமைப்பில் மத வழிபாட்டுக்கான உரிமையும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை பொலிஸார் சட்டத்தை மீறி காடைத்தனமாக செயற்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோடு கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ” எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம்

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசம் பௌத்த சிங்களவர்களுக்கு சொந்தமான பகுதி என தெரிவித்து பௌத்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆலயத்தின் இந்து விக்கிரகங்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டு புதருக்குள் தூக்கி வீசப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேவேளை , குறித்த ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள விடாமல் தொல்பொருள் திணைக்களமும் , வெடுக்குநாறி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர்.

இவை காரணமாக தமிழ் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

இதனை இலங்கைத் தீவில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் தொடரும் பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பின் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

இலங்கையின் வடக்கே தமிழர் வாழும் பகுதியான முல்லைத்தீவு மாவட்டம், குருந்தூர் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் கோயிலில் காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் உள்ளிட்ட பூர்வீக வழிபாடுகள் நிறுத்தப்பட்டு, சூலம் பிடுங்கி எறியப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி பெளத்த விகாரை கட்டுமானப் பணிகள் இடம்பெற்று முடிவடையும் நிலையில் உள்ளது.

இதேவேளை கச்சத்தீவிலும் புத்தர் சிலை ஒன்றை இலங்கை கடற்படையினர் நிறுவியுள்ளனர்.

OruvanOruvan

ஜனாதிபதி தேர்தல்

பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கை தீவானது ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்த்து காத்திருப்பது அனைவரும் அறிந்த விடயமே.

அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி பொலிஸார் செயற்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் அதிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பது தொடர்பில் பல கேள்விகளும் எழுந்து வருகின்றன.

நாடு பொருளாதார நெருக்கடியில் காணப்படும் நிலையில் சிங்கள கடும்போக்கு அரசானது தமிழர் பகுதிகளில் பௌத்த மயமாக்கலையும் காணி சுவீகரிப்புகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

இதனுள் இனவாதம் மறைந்து கிடக்கின்றதா? எனும் கேள்வி குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.