வெடுக்குநாறி மலை விவகாரம்-கைதானவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - East News updates 12.03.2024

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான ஸ்ரீகாந்தா, க.சுகாஸ், அருள், கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி,
விதுசினி, கீர்த்தனன், யூஜின் ஆனந்தராஜா,கொன்சியஸ் உள்ளிட்ட பலர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத மீன்பிடி- பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என மீனவர்கள் எச்சரிக்கை

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை உடன் தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று வடக்கில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன்,யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு காணப்படாவிடின் மாபெரும் போராட்டங்கள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட நோயாளர் விடுதி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் நேற்று (11.03.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள், அதிகாரிகள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

OruvanOruvan

திருமலையில் நடந்த மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

திருகோணமலை மாவட்டதிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நேற்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் தி/ இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

யாழ்.பல்கலை இலட்சனையை அனுமதியின்றி பயன்படுத்த தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையை உரிய அனுமதியின்றி பயன்படுத்தினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ள நிலையில், பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இலட்சினை அனுமதியின்றி வணிக நோக்கில் பயன்படுத்தப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டுகள் மீட்பு

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப் பகுதியில் இருந்து 7 மோட்டர் குண்டுகளை மீட்டனர்.

OruvanOruvan

கனடா அனுப்புவதாக கூறி யாழில் பணமோசடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி நிதிமோசடி செய்த பதுளையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 56 இலட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு வருகை தந்த சர்வதேச விமானம்

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு தனியாருக்கு சொந்தமான "T7SKE Falcon 900EX" ரக விமானமொன்று வருகை தந்து வரலாறறுப் பதிவொன்றை மேற்கொண்டுள்ளது. உள்நாட்டு விமானப் பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு முதற்தடவையாக சர்வதேச விமானமொன்று வருகை தந்துள்ளது.