டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுக்கள்: கைது செய்ய இலங்கையில் இருந்து அனுப்பப்படும் விசேட அதிகாரி

OruvanOruvan

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பாதுகாப்பு ஆலோசகராக அனுப்புவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

துபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களை பொறிவைத்து கைது செய்யும் நடவடிக்கைக்கு வசதியாக குறித்த நியமனம் அமையவுள்ளது

ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் எவரும் இல்லாததால் பாதாள உலக செயற்பாட்டாளர்கள் அந்நாட்டின் பாதுகாப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்படும் போது பொலிஸாருடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் உள்ள பிரச்சினையை சிரேஷ்ட அதிகாரிகள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையின் அடிப்படையில், நாடு கடத்தல் சட்டம் மற்றும் சிவில் சட்டங்களை அறிந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை நியமித்து, துபாயில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை விரைவாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பொறிமுறை ஒன்றை தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சுமார் இருபத்தைந்து பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளதாகவும், ஆனால் அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு போதுமானதாக இல்லை என்றும் மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.