நட்டமைடையும் ஸ்ரீலங்கன் விமான சேவை: நிதி முன்னேற்றம் தொடர்பில் அறிவிப்பதற்கு ஆறுமாத காலஅவகாசம்

OruvanOruvan

SriLankan flight Service

ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடு மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் அறிவிக்குமாறு துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து மற்றும்

விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதன் முகாமைத்துவ மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அறிவித்துள்ளார்.

அவ்வாறு அறிவிக்கப்படாவிடின், சுமார் 6000 ஊழியர்களின் பணியில் ஸ்திரமின்மை ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் சுமார் 510 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நிதி இருப்புநிலையுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த 6 மாதங்களில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

எனவே 06 மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் சிறந்த நிதி ஒழுக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் அதற்காக நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது 16 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 06 நீண்ட தூர விமானங்களும், 29 குறுகிய தூர விமானங்களும் சேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளுக்காக 03 பெல்ஜிய விமானங்களும் ஒரு Fit Air விமானமும் குத்தகை அடிப்படையில் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவில் முக்கிய விமான சேவையாக விளங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த சில காலங்களாக நட்டத்தில் இயங்குவதுடன் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றது.

2022ஆம் ஆண்டு 45 பில்லியன் நஷ்டம் அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.