மட்டக்குளியில் துப்பாக்கிச்சூடு - நான்கு வீடுகள் மீது தாக்குதல்: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Srilanka news daily updates 12.032024

மட்டக்குளியில் துப்பாக்கிச்சூடு - நான்கு வீடுகள் மீது தாக்குதல்

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து, நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலிவத்தை பிரதேச்த்தில் வசிக்கும் அசான் மதுரங்க எனும் 24 வயதுடைய இளைஞனை இலக்கு வைத்தே துப்பாக்கிச் சூட்டுச் நடத்தப்பட்டதாக தெரிவிக்கபப்டுகிறது. சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேருவளை பகுதியில் கரையொதுங்கிய சடலம்

பேருவளை மாகல்கந்த கடற்கரை பகுதியில் இன்று (12) இரவு 9.00 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் தொடர்பான மேலதிக தகவல் வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹரிணி அமரசூரிய லண்டன் பயணமானார்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய லண்டன் பயணமாகியுள்ளார். "மகளிர் நாங்கள் ஓரணியில்" எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 16ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள மகளிர் மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் அவர் அங்கு சென்றுள்ளார்.

வட மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வட மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாணத்தின் செயலாளராக எல்.இளங்கோவனும், வடமேல் மாகாணத்தின் செயலாளராக தீபிகா கே.குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

OruvanOruvan

30 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 21 பேர் பலி

2024 ஜனவரி 01 - மார்ச் 12 வரை நாடு முழுவதும் மொத்தம் 30 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பாதிகியுள்ளன. இதில் 21 பேர் உயிரிழந்ததுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சபாநாயாகரை சந்தித்த தென்கொரிய தூதுவர்

சபாநாயாகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவை இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர,ஜே.சி. அலவத்துவல,கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் ஆகியோரும் இணைந்துக்கொண்டனர்.

OruvanOruvan

சடுதியாக குறைவடையும் மரக்கறி விலை

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்து வருவதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட கரட் , போஞ்சி , கோவா , மீன் , மிளகாய் போன்ற மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்து வருகின்றன.

IMF பிரதிநிதிகளை சந்திக்கும் ஐக்கிய மக்கள் சக்தி

எதிர்வரும் நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தாய்மார்கள்,குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்குவதற்கு IMF இன் ஒத்துழைப்பு வேலைத்திட்டம் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிலையான நிலையில் ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டெலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) நிலையானதாக உள்ளது. அதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 302.07 ரூபாவாகவும், 311.45 ரூபாவாகவும் காணப்படுகிறது - இலங்கை மத்திய வங்கி

OruvanOruvan

Today’s CBSL official exchange rates

நாட்டின் இனப்பிரச்சினைகக்கு பொலிஸ் அதிகார பரவலாக்கலே தீர்வு

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கும் இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைவதற்கும் பொலிஸ் அதிகாரத்துடனான அதிகார பரவலாக்கல் செய்யவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஆறு மாதங்களுக்குள் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும்

அரசாங்கம் வழங்கிய 510 மில்லியன் நிவாரண நிதியை பயன்படுத்தி ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நடவடிக்கைகள் மற்றும் நிதி முன்னேற்றத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் காட்ட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்துள்ளார்.அப்படி முன்னேற்றத்தை காண்பிக்கவில்லை என்றால் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 6 ஆயிரம் பேரின் தொழிலுக்கு உத்தரவாதம் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கின் வைத்தியசாலைகளுக்கு உதவ முன்வரும் ஜப்பான்

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தாய் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான ஆதரவு உபகரணங்களை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இலங்கைக்கு 1,600 மில்லியன் யென் உதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இது இலங்கை ரூபாவின் மதிப்பின்படி, 3.3 பில்லியன் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நுவரெலியாவில் சம்பள உயர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சம்பள உயர்வு தாமதம் மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இன்னும் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (12) கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

OruvanOruvan

ரணில் வெற்றிவாய்ப்பில்லாத வேட்பாளர்- விமர்சித்த திஸ்ஸ குட்டியாரச்சி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெற்றிவாய்ப்பில்லாத வேட்பாளர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி கடுமையாக விமர்சித்துள்ளார்.ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியினால் பல வருடங்களாக ரணிலை ஜனாதிபதியாக்க முடியாமல்போனது. ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை பெயரிட நாங்கள் அவசரப்பட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தியாவின் மிசோராம் மாநிலத்தின் சர்வதேச பல்கலைக்கழகத்தின் அழைப்புக்கு அமைய இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் சுற்றாடல் மற்றும் நிரந்தர அபிவிருத்தி தொடர்பான புத்திஜீவிகள் மாநாட்டில் ஆரம்ப உரை அவர் நிகழ்த்த உள்ளார்.

வெங்காயத்தின் விலை 1000 ரூபா வரை அதிகரிக்கும் சாத்தியம்

இந்தியாவிலிருந்து வெங்காய இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்காவிடின் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 1,000 ரூபா வரை அதிகரிக்கும் என வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் , ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 800 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.

தமிழினம் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்படுகிறது : செல்வராசா கஜேந்திரன்

தமிழினம் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்படுவதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழினத்தை அழித்த சிங்கள் இராணுவம் நடத்திய விமானப்படை கண்காட்சியை தமிழினம் பார்வையிட்டது வேதனைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அனுமதி

நாரஹேன்பிட்டியில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியை சுகாதாரம் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் அபிவிருத்தி திட்டத்திற்காக குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் 17 லட்சம் பொதிகள்

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் லிப்ட் இயங்காமை குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஊழியர்கள் நேற்று அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் 17 லட்சம் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக வர்த்தக வங்கிகள் தெரிவிக்கின்றன.அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று (12) 300 ரூபாவாகவும் விற்பனை விலை 311 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக வர்த்தக வங்கிகள் குறிப்பிட்டுள்ளன.

OruvanOruvan

மொட்டுக் கட்சிக்கு அடிபணியாத மாகாண பிரதம செயலாளர் பதவி நீக்கம்

மொட்டுக் கட்சியின் அநீதியான உத்தரவுகளுக்கு அடிபணியாத வடமேல் மாகாண சபையின் பிரதம செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன பதவி நீக்கப்பட்டுள்ளார். வடமேல் மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நியமனம் செய்யப்படவுள்ளார்.

தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதி மூலம் 3.8 மில்லியன் மோசடி

மார்பகப் புற்று நோய்க்காக பயன்படுத்தப்படும் தரம் குறைந்த Trastuzumab மருந்து இறக்குமதியின் மூலம் 3.8 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக "ஊழல் மோசடிகளுக்கு எதிரான பிரஜைகள் சக்தி" அமைப்பு, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

பால்மா விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா பக்கெட்டின் விலை அடுத்த வாரம் முதல் குறைக்கப்படவுள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் பால் மா பாக்கெட் 100 முதல் 150 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது - வர்த்தக அமைச்சர்

விபத்தில் இருந்து தப்பிய காமினி வலேபொட

நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் வீட்டின் மீது வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த கொள்கலன் பாரவூர்தியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மயிரிழையில் அவர் உயிர் தப்பியுள்ளதுடன், வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் தாய் ஏர்வேஸ்

தாய்லாந்தின் விமான நிறுவனமான தாய் ஏர்வேஸ், ஏப்ரல் 1 முதல் கொழும்புக்கும் பேங்கொக்கிற்கும் இடையில் நேரடி விமான சேவையினை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

OruvanOruvan

Thai Airways to recommence scheduled flights to BIA from April 1

எமது நாட்டுப் பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் : லக்ஷ்மன் நிபுணஆரச்சி

அரசியலின்றி உயிர்வாழ முடியாது என நிரூபிக்கப்பட்டவிடத்து வியட்நாமிய பெண்கள் சுரங்கங்களிலிருந்து வெளியே வந்து அமெரிக்க இராணுவத்துடன் போராடியதைப்போல் எமது நாட்டுப் பெண்கள் இடையறாமல் வெளியில் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 30 புதிய புறப்படும் கவுன்டர்கள் நிறுவப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா பயணமாகும் சம்பிக்க ரணவக்க

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்குப் பயணமானார்.மிசோரம் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த அறிஞர் மாநாட்டின் தொடக்க உரையை வழங்குவதற்கே சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பலசரக்கு பொருட்களை மீள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வர்த்தமானி இடைநிறுத்தம்

மீள் ஏற்றுமதிக்காக மிளகு, மஞ்சள் உள்ளிட்ட வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை உள்நாட்டு வாசனை பொருட்களின் அறுவடை வீழ்ச்சியடையும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

உடல் துடைக்கும் துண்டுகளில் 92 வீதம் இலங்கையில் உற்பத்தி

நாட்டிற்கு தேவையான 92 வீதமான உடல் துடைக்கும் துண்டுகள் (Sanitary Towels) இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் அவற்றிற்கு வரி அறவிடப்படுவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யானைகளைப் பாதுகாப்பதற்காக 4,500 உத்தியோகத்தர்கள்

யானைகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்குகள் அமைச்சுக்கு 4,500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

யுக்திய நடவடிக்கைகளுக்கு விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ நடவடிக்கைக்கு உதவுவதற்காக விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 071 – 8598800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது ops.narcotics@police.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு தகவல் வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ.தனபாலவுக்கு பதவி உயர்வு

பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ.தனபால (T.C.A. Dhanapala)சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது - பொலிஸ் ஊடகப் பிரிவு

சுகாதார ஊழியர்கள் இன்று போராட்டம்

தேர்வு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (12) தொடர் போராட்டம் நடத்த சுகாதாரத்துறை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். தங்களின் சம்பள உயர்வை தொடர்ந்து தாமதப்படுத்துவதையும், பணிக்கு இடையூறு செய்யும் சுகாதாரத்துறை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

எரிவாயுவின் விலையில் ஏற்பட்டது மாற்றம்

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையும் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.35 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

14 வருடங்கள் தலைமறைவாகியிருந்த குற்றவாளி கைது

மட்டக்களப்பில் உயர் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்து திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி 14 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் மதம் மாறி பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்த நிலையிலே கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் தனது திறமையை காட்டியுள்ளார்:மனுஷ நாணயக்கார

நாட்டை ஒப்படைக்க வேண்டிய எதிர்கால தலைவர் யார் என்பதை தேட தேவையில்லை என்ற அளவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது திறமையை காட்டியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வங்குரோத்து அடைந்த நாட்டை,நாடு அந்த நிலைமையில் இல்லை என்று கூறும் இடத்தை நோக்கி ஜனாதிபதியே கொண்டு வந்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு ஏழு பேர் விண்ணப்பம்

தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. குறித்த வெற்றிடத்துக்கு தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்துள்ளனர். உபவேந்தர் பதவிக்கு இம்முறை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசார், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மாத்திரமே விண்ணப்பித்துள்ளமை விஷேட அம்சமாகும்.

தாமரை கோபுரத்தில் போதைப்பொருள் விருந்துபச்சாரம் ; இருவர் பலி

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர். உடுமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட ஹெட்டியாராச்சி ரசாங்கிகா ருக்ஷானி என்ற 27 வயதுடைய பெண்ணும், தெஹிவளையில் வசித்து வந்த சமிந்து திரங்க பெர்னாண்டோ என்ற 22 வயதுடைய இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நீண்ட நாட்களின் பின் இன்று மழை பெய்யும் சாத்தியம்

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் பலி

மல்வத்துஹிரிபிட்டிய விகாரையில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், காவலில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுத்தமான குடிநீர் வசதி கோரி மூதூரில் ஆர்ப்பாட்டம்

சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி மூதூர் -சீதனவெளி கிராம மக்களை நேற்று திங்கட்கிழமை (11) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் புளியடி சந்தியிலிருந்து பிரதான வீதியூடாக நடைபவணியாக மூதூர் பிரதேச சபைக்குள் நுழைந்து அங்கு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு மூதூர் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரிடம் மகஜரும் கையளித்தனர்.

வரி நிலுவையைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

இறைவரித் திணைக்களம் ஏறக்குறைய 1000 நிறுவனங்களுக்கு வரியை செலுத்தக் கோரி அறிவித்தல்களை அனுப்பியுள்ளது. குறித்த நிறுவனங்கள் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி நிலுவைகளை செலுத்த வேண்டியுள்ளது. நிலுவைத் தொகையை ஆறு மாதங்களில் செலுத்தாவிட்டால் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்யப்படுமென எச்சரிக்கை.

ரமழான் காலத்தில் வழமை போன்று பொருட்களின் விலை அதிகரிப்பு

வருடாந்தம் ரமழான் காலத்தில் நடைபெறுவதைப் போன்றே இம்முறையும் ரமழான் ஆரம்பத்துடன் பொருட்களின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெங்காயம் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு கிலோ ஒன்றின் மொத்த விலை 580-600 ரூபாவாகவும், சில்லறை விலை 700 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் ஏனைய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.