ஹரக் கட்டா, குடு சலிந்துவின் விளக்கமறியல் நீடிப்பு: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - local news

ஹரக் கட்டா, குடு சலிந்துவின் விளக்கமறியல் நீடிப்பு

துபாயில் இருந்தபடியே இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் செய்து வந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடம் மடகஸ்காரில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஹரக் கட்டா(நந்துன் சிந்தக) குடு சலிந்து (சலிந்து மல்ஷிக) ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது ஹரக் கட்டாவுக்கு எதிர்வரும் 26ம் திகதி வரையும் குடுசலிந்துவுக்கு எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனையில் பௌத்த விகாரையொன்றில் துப்பாக்கிச் சூடு

மகியங்கனை தம்பான பிரதேசத்தில் உள்ள குகுலாபொல சனுத்தர பௌத்த விகாரைறில் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த கிராமத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக விகாரையின் பிரதம தேரர் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதன் காரணமாக அவரை இலக்கு வைத்தே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகின்றது

தலைபிறை தென்பட்டது- ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்

புனித ரமழான் நோன்பு பெருநாள் நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளர்களுக்கான 02ஆம் கட்ட கொடுப்பனவு ஜுன் மாதம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான 02ஆம் கட்ட கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 15 திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்டன் சமவெளி பூங்காவை நோக்கி பரவும் தீ

ஹல்துமுல்ல உடவேரிய வத்த பிரதசத்தில் இன்று ஏற்பட்ட பாரிய தீ, ஹோர்டன் சமவெளி பூங்காவை நோக்கி பரவும் அபாயம் உள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியலாங்களில் 653 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொண்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 586 பேரும் குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 67 சந்தேகநபர்களும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

யானை வேலிகள் பாதுகாப்புக்கு 4,500 பல்நோக்கு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள அங்கீகாரம்

யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார்.

மஹியங்கனையில் விகாராதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம்

மஹியங்கனை, தம்பனை, குகுலபொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று முற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது விகாரையிலிருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விகாராதிபதியின் அறையை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டாபய எப்படியான புத்தகங்களை எழுதினாலும் பயனில்லை-எஸ்.எம்.சந்திரசேன

கோட்டாபய ராஜபக்ச தற்போது எப்படியான புத்தகங்களை எழுதினாலும் பயனில்லை எனவும் ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த போதிலும் அவை அனைத்தையும் அவர் அழித்து விட்டார் எனவும் மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.இறுதியில் அவர் சிறி சங்கபோதி போல் தலையை தானம் கொடுத்தார்.அவர் கடமையை சரியாக நிறைவேற்றவில்லை எனவும் சந்திரசேன கூறியுள்ளார்.

நானுஓயாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

நானுஓயா பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நானுஓயா பகுதிக்கு ஹோரோயின் போதை பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

OruvanOruvan

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பம் கோரல்

2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்ககொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (www.onlineexams.gov.lk/eic)

கதிர்காமம் ஆலயத்தின் வருமானம் 40 கோடியாக அதிகரித்துள்ளது

ஐந்து கோடி ரூபாவாக இருந்து வந்த கதிர்காமம் ஆலயத்தின் வருமானத்தை கடந்த ஆண்டு 40 கோடி ரூபாவாக அதிகரிக்க முடிந்ததாக அந்த ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தெரிவித்துள்ளார். ஆலயத்திற்கு கிடைக்கும் சகல நிதியையும் கண்காய்வு செய்தமையே இந்த வருமான அதிகரிப்புக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் அறிவிப்பு

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தை வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (11) சிறிதளவு அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 302.62 ரூபாவாகவும், 311.98 ரூபாவாகவும் உள்ளது - இலங்கை மத்திய வங்கி

OruvanOruvan

Today’s CBSL official exchange rates

கடந்த ஆறு நாட்களில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

மார்ச் மாதத்தின் கடந்த ஆறு நாட்களில் மாத்திரம் 40,877 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஸ்யாவில் இருந்து 50,800 பேரும், இந்தியாவில் இருந்து 5,602 பேரும் ஜேர்மனியில் இருந்து 4,110 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25

2024 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி காலை 10:24 மணிக்குத் தொடங்கி மாலை 03:01 மணி வரை நீடிக்கும், அதன் உச்சம் மதியம் 12:43 மணிக்கு நிகழும். இது பெனும்ப்ரா (penumbra) சந்திர கிரகணமாக அமையவுள்ளது.

இரயில்வே ஊழியர்கள் பொது மக்கள் இடையே முறுகல் - கரையோர இரயில் சேவை பாதிப்பு

கரையோர இரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொம்பனி வீதி இரயில் நிலையத்திற்கு அருகில் இரயில்வே ஊழியர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்களை தாக்கும் வெப்பம்

மாணவர்களுக்கு மேலதிகமாக ஒரு தண்ணீர் போத்தலை வழங்கி பாடசாலைக்கு அனுப்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலையில் பொலிஸாரின் அத்துமீறல் - யாழில் போராட்டத்திற்கு அறைகூவல்

வவுனியா வெடுக்குநாறிமலையின் பூசகர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும், பொலிஸாரின் அடாவடி நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாலை, யாழ்ப்பாணம் நல்லை ஆதினம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆதி சிவன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பூஜையில் ஈடுபட்ட சிவபக்தர்கள் மீது பொலிஸார் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று எந்த பாரபட்சமும் பார்க்காமல் தாக்குதல் நடத்தினர். பொலிஸாரின் இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்பினை தெரிவித்தே இன்று போராட்டம் முன்னெடுப்பதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை இரத்துச் செய்ய முடியும்

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் அதிகரித்துக்கொண்ட சம்பளத்தை அரசாங்கம் இரத்துச் செய்ய முடியும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.இதற்காக நிதி குழுவின் அறிக்கை வரும் வரை காத்திருக்க தேவையில்லை.நிதி குழுவின் தீர்மானங்களுக்கு அமையவா அரசாங்கம் இதுவரை வேலை செய்தது?.அரசாங்கம் கொண்டு வந்த சட்டத்தை பயன்படுத்தியே மத்திய வங்கி அதிகாரிகள் சம்பளத்தை அதிகரித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

9 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 14 வயதான மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று கடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக தகவல் தொழிற்நுட்ப பாடத்தை கற்பிக்கும் பிரபல பகுதி நேர வகுப்பு ஆசிரியரை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் அமைச்சர்களின் தலையீட்டை நிறுத்த நடவடிக்கை

அரச நிறுவனங்களில் அமைச்சர்களின் தலையீட்டை நிறுத்துவது தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் பணிப்பாளர் சபைகளுக்கு ஆட்களை நியமித்தல், அந்த நிறுவனங்களின் அரச பங்குகளை தனியாருக்கு வழங்குதல் போன்ற சந்தர்ப்பங்களில், பொறுப்பான அமைச்சரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாய்ப்பளிப்பதை தடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஹரக் கட்டா

பிரபல பாதாள உலகக் குழு நபரான நடுன் ‘ஹரக் கட்டா’ என்று அழைக்கப்படும் சித்தக விக்ரமரத்ன இன்று (11) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எச்சரிக்கை மட்டத்தை அடையும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, வடமேல்,மேல் மற்றும் தென்,சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும். அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதியுடன் நெருங்கமாக செயற்படும் மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள்-கட்சி அதிருப்தியில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுடன் ஜனாதிபதி ரணிலுடன் நேரடியாக செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் அந்த கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது.கட்சியின் எம்.பிக்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்தாக கூறப்படுகிறது.அமைச்சர்களாக பதவி வகிக்கும் மொட்டுக்கட்சியின் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றனர்.

எரிபொருள் விலையை மேலும் குறைக்க தயார் - கஞ்சன விஜேசேகர

திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், விலை சூத்திரம் தொடர்பில் பங்குதாரர்களை அழைத்து எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுக்திய - தேசபந்து தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை

யுக்திய நடவடிக்கையின் கீழ் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் கொழும்பு - வெல்லம்பிட்டி, சேதுவத்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று (11) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேருந்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்

குருநாகலில் இரந்து வாரியபொல நோக்கி சென்ற தனியார் பேருந்தில் நேற்றிரவு பயணித்த ஒருவர், பேருந்தின் பின் கதவால் வெளியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். வெளியில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு கடந்தவிருந்த போதைப்பொருள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல்மார்க்கமாக கடத்த முயன்ற 71 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் என்னம்கோட்டை இறால் பண்ணையில் 950 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பௌத்த பிக்கு மீது துப்பாக்கி சூடு - சந்தேக நபர் கைது

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மொணராகல, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை குற்றவாளிகள் துபாயிலிருந்து வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றனர்-நிஹால் தல்துவ

டுபாய்க்கு தப்பிச் சென்ற இலங்கை குற்றவாளிகள் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.கடுமையான குற்றவாளிகள் வேறு பெயர்களில் கடவுச்சீட்டு தயாரித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

சோளச் பயிர்ச் செய்கையை விரிவுப்படுத்த தீர்மானம்

எதிர்வரும் சிறுபோகத்தில் 40000 ஏக்கர் சோளச் பயிர்ச் செய்கையை விரிவுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட சில மாவட்ட விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள் மற்றும் நிதி வசதிகள் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பிரதமர் தினேஷ் குணவர்தன இம்மாத இறுதியில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சீன - இலங்கை முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடும் என தெரிவிக்கப்படுகின்றது.

யுக்திய நடவடிக்கையில் இராணுவத்தினரையும் இணைப்பதற்கு தீர்மானம்

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். பொலிஸ் அதிகாரிகளின் குறைபாடுகள் இருந்தால், சோதனைகளுக்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றால், வீதி மறியல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் என்றால், கடுமையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியிருந்தால், அந்த மாகாணத்திற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் ஊடாக இராணுவத்தினரை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 27 பேர் கைது

ஹோமாகம, மாகம்மன பகுதியில் இடம்பெற்ற விருந்தொன்றில் போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பெண்கள் உட்பட 27 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

யாழ் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

யாழ். காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 3 படகுகளுடன் 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த 22 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலனிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நாடு பெரும் அச்சத்தில் இருக்கின்றனது-ஜே.வி.பி

நாடு தற்போது விஷாலா நகரின் மூன்று அச்சங்களை விட அதிகமான அச்சத்தில் இருப்பதாகவும் இதன் காரணமாக மக்கள் நாட்டை விட்டு தப்பியோடுவதாகவும் அடுத்த என்ன வரி விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தொழிற்சாலைகளை நடத்துவோர் இருப்பதாகவும் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

போஷாக்கின்மையால் பாதிக்கப்படும் இலங்கை சிறுமிகள்

இலங்கையில் 4 லட்சத்து 10 ஆயிரம் (5 முதல் 19 வயதுக்குற்பட்ட) பெண் பிள்ளைகள் போஷாக்கிண்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ நாளிதழ் கூறியுள்ளது. உலகில் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள பெண் பிள்ளைகள் பட்டியலில் இந்திய சிறுமிகள் முதலிடத்தில் உள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஆயிரம் நிறுவனங்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை

சுமார் 1,000 நிறுவனங்கள் 06 மாதங்களுக்குள் 160 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகையை செலுத்த தவறும் நிலையில் அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிகரிக்கும் காட்டுத்தீ - சட்ட நடவடிக்கைக்கான விசேட வேலைத்திட்டம் அமுல்

வறட்சியான காலநிலையுடன் காட்டுத் தீ பரவல் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த சில மாதங்களில் நாடளாவிய ரீதியில் சுமார் 25 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், தீ வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.