ரணில் ஜனாதிபதித் தேர்தலை விரும்புகிறார்; மகிந்த பொதுத்தேர்தலை நாடுகிறார்- அனுர: பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பியதன் பின்னணி

OruvanOruvan

Ranil - Basil - Anura

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த விரும்பினாலும், ராஜபக்சக்கள் பொதுத் தேர்தலையே முதலில் நடத்த வேண்டுமென விரும்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கூட்டணியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடிமட்டத்தில் தமக்கு வலுவான ஆதரவு இல்லாததன் காரணமாக, பொதுத்தேர்தலை விட ஜனாதிபதித் தேர்தலையே ரணில் விரும்புவதாக அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத்தேர்தலை விரும்பும் மொட்டு கட்சி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வலுவான வேட்பாளர் ஒருவர் இல்லாததன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலை தாம் எதிர்கொள்வது பாதகமானது என கருதுவதால், ராஜபக்சக்கள் முதலில் பொதுத்தேர்தலையே விரும்புவதாக அனுர குறிப்பிட்டுள்ளார்.

இந்த பின்னணியில், ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தயாராகவில்லை என்பது புலப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய நிலவரங்களின்படி ராஜபக்சக்களை மீண்டும் தலைவராக அரியணை ஏற்ற முடியாது என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நன்கு அறிந்துள்ளது.

எனினும், பொதுத் தேர்தல் தங்களுக்கு சாதகமாக இருப்பதாகவே மொட்டு கட்சியினர் நம்புகின்றனர். இந்த அடிப்படையிலே, பசில் ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்தார்.

இதனிடையே, பசில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை எனவும், பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டே அவர் இலங்கை வருவதாகவும் ராஜபக்சக்களுடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முனையும் தேர்தல்கள் ஆணைக்குழு

எவ்வாறாயினும், இந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்பதில் இரு பிரிவினருக்கும் இடையிலான முறுகல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இது இவ்வாறு இருக்க, ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழு தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை குருணாகல் - குளியாப்பிட்டிய நகரசபை மைதானத்தில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தது. ஏனைய கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதனை அவதானிக்க முடிகிறது.

அச்சத்தில் முக்கிய அரசியல் காட்சிகள்

ஆட்சியை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் இந்த தருணத்தில் இந்தத் தேர்தலையும் சந்திக்க அஞ்சுவதாக அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இம்முறை முக்கிய அரசியல் காட்சிகள் ஆட்சியை இழக்க போவதாகவும், அதன் காரணமாகவே தேர்தலை எதிர்கொள்ள தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது ஒரு அரசாங்கத்தின் அல்லது ஜனாதிபதியின் மாற்றமாக இருக்காது எனவும், அரசியல், சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அனுர சூளுரைத்துள்ளார்.

மக்களின் அதிருப்தியை சாதகமாக்கும் அனுர தரப்பு

இலங்கையின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆகவே, வழமையான அரசியல் கலாசாரத்தையோ ஆட்சி மாற்றத்தை தற்போதைய சமூகம் எதிர்பார்க்கவில்லை.

இப்படியானதொரு சூழ்நிலையில், மக்களின் விரக்தி மற்றும் அதிருப்தியினை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தந்திரோபாயத்தையே அனுர தரப்பு முன்னெடுத்துள்ளது.

இதன் அடிப்படையிலே, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் அடுத்து தமக்கே உரியது என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் தேசிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்கால நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றமையினை அவதானிக்க முடிவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.