கோட்டாபயவின் புத்தகத்தில் உண்மை இருப்பது போல் பொய்யும் உள்ளது: அரசாங்கத்தில் இருந்து நாங்கள் விலகவில்லை அவரே நீக்கினார்-உதய கம்மன்பில

OruvanOruvan

Uthaya Gammanpila and Gotabaya Rajapaksa

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்து தானும் விமல் வீரவங்சவும் நீக்கப்படவில்லை எனவும் அவரே தம்மை நீக்கியதாகவும் அதன் பின்னர் அவரது அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகியது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச எழுதி வெளியிட்டுள்ள புத்தகம் தொடர்பில் கொழும்பில் இன்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபா ராஜபக்ச எழுதியுள்ளதாக கூறப்படும் புத்தகத்தில் சில இடங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எங்களை பற்றி கூறப்பட்டுள்ளதால், அது குறித்து கேட்பதற்காக எங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.

புத்தகம் வெளியிடப்பட்ட நாளிலேயே புத்தகத்தை வாங்கி முழுமையாக வாசித்தேன். அதில் உண்மை இருப்பது போல் பொய்யும் இருக்கின்றது.

அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிய சம்பவத்தை கோட்டாபய மறந்து விட்டார்

அதேபோல் பாரதூரமான மறதியும் இருக்கின்றது. 66 வது பக்கத்தில் மேலே விமல் மற்றும் உதய ஆகியோர் எம்மை விட்டு விலகி சென்ற என்றுள்ளது. அது மிகப் பெரிய மறதி.

உண்மையில் நாங்கள் விலகவில்லை, நீக்கப்பட்டோம். அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகி அந்த சம்பவத்தை மறந்து போனது ஆச்சரியத்திற்குரியது.

கொள்ளை,வன்முறைகளில் ஈடுபட்டதன் காரணமாக எங்களை அரசாங்கத்தில் இருந்து நீக்கவில்லை. நாட்டையும் அரசாங்கத்தையும் காப்பாற்ற முயற்சித்ததால் நாங்கள் நீக்கப்பட்டோம்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட போகிறது என்று நாங்கள் கூறிய போதிலும் கேட்கவில்லை என்பதால், மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட போகிறது, அதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுதி புத்தகம் ஒன்றை வெளியிட்டு பொது கருத்தரங்களை நடத்தியதே நாங்கள் செய்த தவறு.

பொய்யான பூச்சாண்டிகளை காட்டி அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதாக கூறியே எங்களை நீக்கினார்கள்.

எனக்கும் பசிலுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கவில்லை

அதேபோல் 65 வது பக்கத்தில் இருப்பது போல் எனக்கும்,பசில் ராஜபக்சவுக்கும் இடையில் எந்த தனிப்பட்ட பிரச்சினைகளும் இருக்கவில்லை.

நான் அவரது மகளை திருமணம் செய்ய கேட்டு அவர் முடியாது என்று கூறியதால் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையல்ல.

அத்துடன் மல்வானை வீட்டுக்கும் நான் உரிமை கோரவில்லை. எனக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் அரசியல் பிரச்சினைகள் மாத்திரமே இருந்தன.

எனக்கும் பசிலுக்கும் இடையில் இருந்த தனிப்பட்ட பிரச்சினை என்னவென்று கூறியிருந்தால்,நானும் அதனை அறிந்துக்கொண்டிருப்பேன்.

புத்தகத்தில் இருக்கும் மிகப் பெரிய குறை

எனினும் கடன் நெருக்கடி ஏற்பட்ட விதம்,மேற்குலக நாடுகள் அவரது அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்த விதம்,இராணுவ தளபதி தனது பொறுப்பை தவறவிட்டமை தொடர்பில் கோட்டாபய கூறிய கதை உண்மை.

துரதிஷ்டவசமாக அப்படியான சதித்திட்டம் இருக்கின்றது என்று நாங்கள் கூறும் போது அதனை கேட்டு, அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தேவை அவருக்கு இருக்கவில்லை.

அதேபோல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தியமை,எரிபொருள் விலைகளை அதிகரித்து கேள்வியை கட்டுப்படுத்தியமை குறித்து நாங்கள் கூறியதை கேட்காது அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு சதி செய்தவர்கள் பற்றி கூறாதது புத்தகத்தில் உள்ள மிகப் பெரிய குறையாக காண்கின்றேன் எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.