கோட்டாவின் நூல் பற்றி விகாராதிபதி ஆவேசம்: திருட்டுக் குடும்பம் தொடர்பாக எழுதுங்கள் என்றும் விமர்சனம்

OruvanOruvan

“இலங்கைத் தீவுக்கு ஏன் இடி விழுந்தது என்ற தலைப்பில் நூல் எழுதுங்கள்... இலங்கை வங்குரோத்து அடைய காரணம் யார்?

சதி அல்ல சூழ்ச்சி அல்ல நாட்டை நாமே வீழ்ச்சி அடைய செய்தோம் பொருளாதார வீழ்ச்சிக்கு நாமே வித்திட்டோம்” என்பதை எழுதிவையுங்கள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் கோட்டாவின் நூல் வெளியீடு குறித்துக் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

இலங்கையை இவ்வாறானதொரு நிலைக்கு தள்ளியமை தொடர்பாக நூல் எழுதி அதனை மக்களுக்கும் உலகத்துக்கும் அறியப்படுத்துங்கள் எனவும் அவர் ஆவேசமாகச் சாடினார்.

2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து தான் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச “ஜனாதிபதி பதவியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகள் எனும் பெயரில்” நேற்று வெளியிட்டார்.

நூல் வெளியீடு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

உரப்புரட்சி மற்றும் திருட்டு குடும்பம் தொடர்பான நூலை எழுதுங்கள் என மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகேவும் நூல் தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

OruvanOruvan

தேர்தல் பிரச்சாரமா?

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நூல் வெளியீடு அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் என்பவற்றை தொடர்புபடுத்தி நோக்கும் போது இலங்கை அரசியலமைப்பிற்குள் மீண்டும் பிரவேசிக்கும் நோக்கில் கோட்டா வேறுவழிகளில் பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது.

மறுபுறம் “வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டதன் பிண்ணணியிலேயே போராட்டக்களத்திற்கு சென்றதாகவும் வேறு எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லையென ஐக்கிய மக்கள் சக்தி தமது வெளிப்பாட்டை தெரிவித்துள்ளது.

கோட்டாவின் பதவி நீக்க பின்னணி

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து எதிர்வரும் காலங்களில் வெளிகொணரப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அநுருந்தவினால் புதிய அறிவிப்பொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலுக்குள் பிரவேசிக்க துடிப்பவர்களால் சதி திட்டம் நிகழ்த்தப்பட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

சூழ்ச்சி பற்றிக் கோட்டாவினால் இனங்காணப்படாமை குறித்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கவலை வெளியிட்டுள்ளார்.

“சூழ்ச்சியின் காரணமாகவே கோட்டாவிற்கு வெளியேற நேரிட்டது தற்போது பெரஹரா (ஊர்வலம்) சென்று விட்டது. யானை இலத்தியை அப்புறப்படுத்தும் வேலை மாத்திரமே அவருக்கு உள்ளது அதனை அகற்றி சுத்தப்படுத்தி தாருங்கள்” எனவும் மேர்வின் சில்வா கோரியுள்ளார்.

OruvanOruvan

மீண்டும் ஒரு முறை நினைவு கூரல்

அன்று ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டதும் ஆளும் கட்சிக்காகவோ எதிர்கட்சிக்காகவோ அல்லது வேறு அரசியல் கட்சிகளுக்காகவோ அல்ல , இலங்கையில் மின்சாரம், எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் சேவைகள் கிடைக்காது பொது மக்கள் அவதியுற்றனர். பல உயிரிழப்புகளும் கூட பதிவாகின.

பொதுமக்களுக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறாத பட்சத்திலேயே வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைததீவில் அனைவரும் ஒன்று திரண்டு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர் என்பதை அனைத்து மக்களும் நினைவு படுத்துவர் என்பது பகிரங்கமான உண்மை.