அலிசப்ரி ரஹீமை கட்சியில் இருந்து நீக்குவதற்கு இடைக்கால தடை: ஒழுக்காற்று விசாரணைக்கு அனுமதி

OruvanOruvan

Ali Sabri Raheem - Member of Parliament

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கட்சியில் இருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்புத்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் அலி சப்ரி ரஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில், கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமை காரணமாக அவரது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யவதற்கு கட்சி தீர்மானித்திருந்தது.

எனினும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவுடன் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் இலச்சினையின் கீழ் அலிசப்ரி ரஹீம் போட்டியிட்டதன் காரணமாக மக்கள் காங்கிரஸ் மூலம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்பட்டது.

இதனையடுத்து தேசிய முஸ்லிம் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் நயீமுல்லா, அலி சப்ரி ரஹீமின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

எனினும், குறித்த கடிதத்தை சவாலுக்குட்படுத்தி அலி சப்ரி ரஹீம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று (07) வியாழக்கிழமை நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இடம்பெற்றது.

வழக்கின் பிரதிவாதிகளாக ரிசாத் பதியூதீன் மற்றும் நயீமுல்லா ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இதன்படி, அலி சப்ரி ரஹீமை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், மனுதாரருக்கு எதிராக சட்டபூர்வ ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுவதை தடை செய்ய முடியாது என நீதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ளது.