சிவராத்திரி தின வழிபாடுகளுக்கு வடக்கில் தடை: நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி உரை

OruvanOruvan

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் உள்ள ஆலயங்களிலும் சிவராத்திரி தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்துக்களின் நம்பிக்கை மற்றும் நல்லிணகத்தை சீர்குலைக்கும் வகையில் வடக்கில் சிவராத்திரி தின நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்த பொலிஸார்

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்ப்பாடுகளை முன்னெடுத்த ஆலய பூசகர் மதிமுகராசா உட்பட இருவரை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பூஜை வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதையடுத்து, ஆலய நிர்வாகத்தினால் வவுனியா நீதிமன்றில் நகர்த்தல்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதனை நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் வெடுக்குநாறிமலை ஆலயவிடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

இதனைதொடர்ந்து ஆலய பகுதியில் சிவாராத்திரி தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இன்று முன்னெடுக்க ஆலயத்தை நோக்கி பயணித்தவேளையில் ஆலய பூசாரி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்த வருடம் உத்தரவு வழங்கியிருந்தது.

இருப்பினும் குறித்த பகுதி வடுன்னாகல தொல்பொருள் பிரதேசம். எனவே பூஜை வழிபாடுகளை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

பஞ்சாநந்த தர்மாயதனத்தைச் சேர்ந்த சிறி ஜினாந்த தேரரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவது அமைதியை சீர்குலைக்கும் சூழ்நிலையை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பிரதான பூசகர் மதிமுகராசா உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்கள், அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் செய்த பிரார்த்தனையை நினைவு கூறுவதாக மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

மனிதர்களிடம் உள்ள மமதை, அகந்தை அற்ற ஞானத்தை பரவச்செய்யும் வகையில் இந்துக்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

கடந்த இரு வரடங்களில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை மீட்க அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.

இந்துக்கள் மாத்திரமின்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் வாழ்வையும் செமிப்பாக்கும் எதிர்பார்ப்புடன் இன்று மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் வெற்றிகரமான நிலைக்கு வந்துள்ளது.

மகா சிவராத்திரி தினத்தை அர்த்தமாக்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தி மமதை அகங்காரம் இல்லாத நாடாக அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் எதஜர்காலத்திற்கான திட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டும்.

இத்தினத்தில் இந்து மக்கிளினால் ஏற்படும் ஒளியானது முழு நாட்டு மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.