உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஐந்து வருடங்கள்: ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நீதி கோரிய கர்தினால்

OruvanOruvan

Statement by Malcolm Cardinal

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் காணொளி ஊடாக கர்தினால் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைவருக்குமான வெளிப்படையான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் செயன்முறையின் தோல்வி குறித்தும் அவர் இதன்போது கவலை தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், இன்று வரை பல்வேறும் மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளிப்படையான, சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்காக தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்கள் இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் நடந்த அனைத்து விதமான கொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் அத்துமீறல்கள் பற்றிய வெளிப்படையான விசாரணைகள் அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு தேசத்தையும் அனைத்து விடயங்களிலும் வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்துமாறும் கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த தாக்குதலில் 39 வெளிநாட்டவர்கள், 3 பொலிஸார் உட்பட 273 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் இன்று வரை அதன் பாதிப்பை எதிர்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் வந்த ஆட்சியாளர்களினால் எத்தனையோ விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இன்று வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.