இலங்கை - இந்திய மின் இணைப்புத் திட்டம்: 1.2 பில்லியன் டொலர்கள் முதலீடு - சந்தோஷ் ஜாவின் புதிய அறிவிப்பு

OruvanOruvan

Sri Lanka - India Power Link Project

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தி மற்றும் நில இணைப்பு முயற்சிகளை சாத்தியமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தென்னிந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் முக்கிய திட்டங்களாக எண்ணெய்க் குழாய் அமைப்பு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோக திட்டங்கள் உள்ளன.

பிரதான இலக்கு

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தின் பிரதான இலக்கு அனுராதபுரத்தையும், சென்னையையும் நேரடியாக இணைப்பதாகும்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கி வளாகத்தை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன் இதற்கான இந்திய முதலீடுகளை பயன்படுத்த உள்ளது.

இந்த எண்ணெய் தாங்கி தொகுதியை ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் கூட்டு தொழில் முயற்சியாக அரசாங்கம் மேம்படுத்தி வருகிறது.

பெற்றோலிய ஆய்விற்கான மத்திய நிலையமாக திருகோணமலையை பயன்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இந்த நிலையில், 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இருநாடுகளுக்கும் இடையிலான மின்கடத்தல் திட்டத்தை முன்னெடுக்க மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுட்டிக்காட்டியுள்ளார்.

கடல் காற்றின் திறன் பயன்பாடு

”இலங்கையின் மின் துறையில் தனியார் துறை முதலீடும் இந்தத் திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கப்படும். அத்துடன், இலங்கையின் ஆற்றல் உற்பத்தி திறன்களை மேம்படும் என்பதுடன், செலவுகளை குறைக்க முடியும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான கடலுக்கு அடியில் மின் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் குழாய்களை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கூறியுள்ளார்.