தென்னிலங்கையின் விசுவாசிகளே வடக்கு, கிழக்கு ஆளுநர்கள்: இந்தியாவின் அசமந்தம்

OruvanOruvan

North east

இலங்கையில் ஈழத்தமிழ் மக்களின் தற்காலிகள அரசியல் தீர்வாக 13 வது திருத்தின் ஊடாக மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்ட போதிலும் இன்று வடக்கு கிழக்கில் தேர்தல்கள் இன்றி செயலிழந்து கிடக்கின்றன.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் ஒரு முறை நடைபெற்று இயங்கிய போதிலும் தற்போது வடக்கிலும் கிழக்கிலும் ஆளுனர்களே பதவி வகித்துள்ளனர்.

ஒற்றையாட்சியின் ஜனாதிபதி தற்துணிவோடு நியமிக்கப்படும் ஆளுனர்கள் தென்னிலங்கையின் விசுவாசிகள். தென்னிலங்கையின் அரசியல் வியூகங்களை கொண்டு செல்பவர்கள்.

ஜனாதிபதிக்கு மட்டுமே பொறுப்புச் சொல்லும் ஆளுனர்கள் மாகாண சபை இயங்கு நிலையில் இல்லாத காலப்பகுதியில் அவர்களே தற்துணிவு ஆட்சியாளராகவும் செயற்படுகின்றனர். பொலிஸ் காணி என அதிகாரங்களையும் அவர் கொண்டுள்ளனர்.

இதேவேளை பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த தடை விதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்க அமைச்சரவை தற்போது அதிகாரம் வழங்கியள்ளது.

பெயரளவு பதவிகளாக கொண்டு வரப்பட்ட போதிலும் நடைமுறையில் அவ்வாறு இல்லை.இலங்கை அரசாங்கத்தின் பலம்பொருந்தியவர்களாக இவர்கள் செயற்படுகின்றனர்.

மாகாண எல்லைக்குள் அதிகாரத்தைக் கொண்ட ஆளுனர்கள் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்குத் தேவையானவற்றை லாவகமாக செய்து கொடுத்துவிடுகிறார்கள்.

தமிழ் பேசும் தரப்பினரை ஆளுனராக நியமிக்க கோரியிருந்தாலும் அவர்களின் விசுவாசம் என்பது தென்னிலங்கைக்கே என தமிழ் மக்கள் விசனம் வெளியிட்டுவருகின்றனர்.

தொடரும் அரசியல் அவலம்

தமிழ் மக்களின் வாழ்வியலில் பல்வேறு பிரச்சனைகள் புரையோடிக் கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் மாகாண சபைகளைக் கூட தருவதற்கு சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.இந்தியாவால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்தக் கூட இந்தியா விலகி நிற்கின்றது.

இலங்கைக்கு எடுத்துக்கூறி மாகாண சபை நிர்வாகத்தை தோற்றுவிற்பதற்கான தேர்தலை நடத்த வைப்பதற்கு அழுத்தங்களை கொடுக்காது வெறுமனே சீனா வடக்கு கிழக்கில் கால்ஊன்றுகிறதா என கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியா இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஈழத்தமிழரை வஞ்சிக்கின்றது என்பதே தமிழ் மக்களின் அங்கலாய்ப்பு.

தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படும் போக்கே காணப்படுகின்றது. உயிரழிவு,சொத்தழிவு என பல்வேறு அழிவுகளை சந்தித்த ஈழத்தமிழினம் இன்றும் தமக்கான உரிமைக்காக உழன்று கொண்டு தான் இருக்கின்றது.