“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற சதி”: கோட்டாபய ராஜபக்ச வெளியிடும் புத்தகம்

OruvanOruvan

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகம் நாளை வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச,

“2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றதிலிருந்து இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு தலையீடுகள் அதிகரித்துள்ளன.

2019 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்திலிருந்து, சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் என்னை அரியணையில் இருந்து அகற்ற முயன்றன.

நான் ஜனாதிபதியாக பதவியில் இருந்த இரண்டரை வருட காலப்பகுதி முழுவதும் இலங்கை மற்றும் உலகம் முழுவதிலும் பரவிய கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவே செலவிடப்பட்டது.

2022 மார்ச் மாத இறுதியில், தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருந்த நேரத்தில், தடுப்பூசி பிரச்சாரம் முடிந்து, பொருளாதாரம் மீண்டு வந்த நேரத்தில், சதிகார சக்திகள் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான அரசியல் பிரச்சாரத்தை ஆரம்பித்தன.

இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் அறுபது வருடங்களில் அனுபவித்திராத வகையில் இன்று இந்த நாட்டில் வெளிநாட்டுத் தலையீடும், உள் அரசியலை வெளிக் கட்சிகள் கையாள்வதும் இடம்பெற்று வருகின்றன.

சுதந்திரத்திற்குப் பிறகு தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அமைதியான அதிகாரப் பரிமாற்றங்களை மட்டுமே அனுபவித்த இலங்கையின் அரசியலில் என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றும் அரசியல் இயக்கம் புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.

எனவே, 2022 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இந்த நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கு கடுமையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம், சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் நேரடி அனுபவமாகும். எனவே, இந்நூல் இலங்கையர்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டினருக்கும் முக்கியமானது என நான் நம்புகிறேன்.

என்னுடைய இந்தப் நூல், நாளை, மார்ச் 07, 2024 வியாழக்கிழமை முதல் முன்னணி புத்தக விற்பனை நிலையங்களில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் கிடைக்கும்.” என தெரிவித்துள்ளார்.