அம்பானி வீட்டு விசேஷத்தில் சமைத்து அசத்திய 13 இலங்கையர்கள்: இலங்கையின் நாளாந்த செய்திகள் 40 சொற்களில்
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உணவு தயாரிப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த 13 பேர் அங்கு சென்றிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.
ஹூதிகளின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் சிக்கிய இலங்கையர் மீட்பு
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் சிக்கிய இலங்கையர் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கப்பலில் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட பணியாளர்கள் சிக்கயிருந்த நிலையில் இலங்கைப் பணியாளர்கள் உள்ளிட்ட சிப்பந்திகள் இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இன்று மாலை மீட்கப்பட்ட இலங்கையரில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், ஏனைய இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை - தாய்லாந்து வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (SLTFTA) சவாலுக்கு உட்படுத்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் (FR) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனின் நியமனம்; ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்
நாட்டின் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்ததை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செயதுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 6.2 மில்லியன் தெரு நாய்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று (07) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இதனால் சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் பாரிய பிரச்சினைகளை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை - தாய்லாந்து உடன்படிக்கையை சவால் செயது மனுத் தாக்கல்
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (SLTFTA) சவால் செய்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் உட்பட மொத்தம் 27 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மின் குறைப்புக்கு அமைய பொருட்களின் விலையையும் குறைக்குமாறு அறிவுறுத்தல்
மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு அமைவாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்குமாறு சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (07) தெரிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளருக்கு பிணை
கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) ஏற்பாட்டாளர் மதுஷன் சந்திரஜித் மற்றும் மேலும் ஓர் மாணவர் செயற்பாட்டாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வங்குரோத்து நாட்டை மீட்டெடுத்த ரணிலே மீண்டும் ஜனாதிபதி வேட்பாளர்
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய வேட்பாளராக, பொது வேட்பாளராக, தேசிய கொள்கைகளுடனான வேட்பாளராகவே அவர் களமிறங்குவார். வங்குரோத்து நிலையில் இருந்து ஒன்றரை வருடகாலத்திற்குள் நாட்டை மீட்டெடுத்தவர் ரணில் விக்ரமசிங்க. அவரால்தான் நாட்டை கட்டியெழுப்பமுடியும் என்பதை மக்களும் அறிவர் எனத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுடன் இருவர் கைது
மூன்று கிலோ கிராமுக்கு அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மன்னார் காற்றாலை திட்ட பாதிப்பு குறித்து ஆராயவுள்ளதாக அமைச்சர் பவித்திரா தெரிவிப்பு
மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரத் திட்டத்தினால் ஏற்படும் சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரதேவி வன்னியாராச்சி இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கோபா, கோப் குழுவுக்கு புதிய தலைவர்கள்
அரசாங்கக் கணக்குக் குழுவின் (COPA) புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கிழக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
செய்த கிழக்கு மாகாண முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினைகள், கிழக்கு மாகாண சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளின் நியமன விடயங்கள், காணி பிரச்சினைகள், மட்டக்களப்பு மாவட்ட கல்வி மேம்பாட்டு விடயங்கள், என பல்வேறு சமூக நல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் - அலி சப்ரி அழைப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பதினைந்து வருடங்கள் கடந்தும் புலிகளை மறக்காத மொட்டுக் கட்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனைப் பார்த்து புலி என்று நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம திட்டியமை குறித்து அரசியல் வட்டாரங்களில் நகைச்சுவையாக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பதினைந்து ஆண்டுகள் கடந்தும் மொட்டுக் கட்சியினரால் புலிகளை மறக்க முடியவில்லை என்றும் ஒரு சாரார் விமர்சித்துள்ளனர்.
டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று சிறு வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (07) சிறிதளவு வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 303.09 ரூபாவாகவும், 312.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது - இலங்கை மத்திய வங்கி
ஶ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் நடவடிக்கை தாமதம்
ஶ்ரீலங்கன் விமான சேவையின் செயற்திறன் இன்மை மற்றும் பாரிய கடன்சுமை காரணமாக அதனை பொறுப்பேற்க எந்தவொரு தனியார் முதலீட்டாளரும் முன்வராத நிலையில் ஶ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போதைக்கு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஶ்ரீலங்கன் விமான சேவையை கொள்வனவு செய்வதற்கான டெண்டர் காலம் 45 நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவை சுகம் விசாரிக்க மஹிந்த வருகை
முன்னாள் அமைச்சரும், மொட்டுக் கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், தனது தம்பியிடம் நலம் விசாரிப்பதற்காக பத்தரமுல்லை வீட்டுக்கு மஹிந்த ராஜபக்ச நேரில் சென்றுள்ளார். இருவரும் அங்கு சிறிது நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசித்துள்ளனர்.
கார்தினால் மெல்கம் ரஞ்சித், ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெ்றறு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை அதன் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவில்லை என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, காணொளி வழியாக ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
மொட்டுக் கட்சி அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஏமாற்றம்
மொட்டுக் கட்சியின் அரசியல்வாதிகள் பலரும் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்நாட்களில் வெளிப்படையாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றார். அத்துடன் மொட்டுக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதுடன் நின்று விடாமல், ரணிலைத் தவிர பொருத்தமான வேட்பாளர் யாரும் மொட்டுக் கட்சியில் இல்லை என்றும் அவர் கூறி வருகின்றார். இதன் காரணமாக மொட்டுக் கட்சி அரசியல்வாதிகள் கடும் அதிருப்தியுடன் காணப்பட்டிருந்தனர்.
ஹம்பாந்தோட்டையில் ,நிமல் லான்சா அணியின் அடுத்த கூட்டம்
புதிய முன்னணி எனும் பெயரில் நிமல் லான்சா, அனுர யாப்பா ஆகியோர் ஆரம்பித்துள்ள அரசியல் அணியின் அடுத்த கூட்டம் விரைவில் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மற்றும் திரைமறைவு ஆதரவு என்பவற்றை அமைச்சர் மஹிந்த அமரவீர செய்து கொடுத்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
மார்ச் மாத கடைசியில் நாமல் எதிர்க்கட்சிக்குச் செல்ல உத்தேசம்
இம்மாத இறுதிக்குள் அல்லது எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நாமல் ராஜபக்ஸ எதிர்க்கட்சியில் அமரும் உத்தேசமொன்றைக் கொண்டுள்ளார். ஆளுங்கட்சியில் இருக்கும் மொட்டுக் கட்சியின் 25 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் போது நாமல் ராஜபக்ஷவுடன் இணைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் குறித்த கடும் அதிருப்தியில் தயாசிறி ஜயசேகர
முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தற்போதைய நாட்களில் அரசியல் குறித்த கடும் அதிருப்தியில் இருக்கின்றாராம். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தான் நீக்கப்படுவதை அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லையாம். அதன் காரணமாக அவ்வாறு நீக்கப்பட்டதில் இருந்து மைத்திரியை கடுமையாக வெறுக்கும் அதே அளவுக்கு அரசியல் குறித்தும் கடும் அதிருப்தியுடன் இருக்கின்றாராம்.
தன்சானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கை இளைஞர்கள் பலி
தான்சானியாவில் செவ்வாய்க்கிழமை (05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் காலி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் ஆவர்.
காஜிமாவத்தையில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை துரிதப்படுத்த ஜனாதிபதி உத்தரவு
கொழும்பு காஜிமாவத்தையில் வீடற்ற அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் - ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு
இனி தவணை முறையில் பணம் செலுத்தி மின்சார இணைப்பை பெற்றுக்கொள்ளலாம்
தவணை முறையில் பணம் செலுத்தி புதிதாக மின்சார இணைப்பை பெற்றுக்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உடப்புவ பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பிணை
பொதுமக்கள் பலரை தாக்கிய குற்றச்சாட்டின் கைது செய்யப்பட்ட புத்தளம், உடப்புவ பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) புத்தளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களால் தாக்கப்பட்ட இரு ஆசிரியர்கள்
கல்னேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட குழு ஒன்றினால் இரு ஆசியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாற்று திறனாளிகளுக்கு அஸ்வெசும நலன்புரியினூடாக கொடுப்பனவு
மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரியினூடாக வழங்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.
ரணில் - கோட்டா தொடர்பான இரு புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியீடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் தொடர்பான புத்தகங்கள் இன்றைய தினம் வெளியாகவுள்ளன. ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை விரட்டியடித்த சூழ்ச்சி” என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்படவுள்ளது. இதேவேளை, “பிரேஷ் என்ட் பிரஷ்“ என்ற தலைமைப்பிலான புத்தகமொன்று இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.
மாணவர் போராட்டத்தின் மீது தாக்குதல் - தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் கண்டனம்
பொரளையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உடப்பு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்
உடப்பு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தற்காலிகமாக பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். புத்தளம் உடப்பு பகுதியில், கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நடத்தப்பட்ட குறித்த தாக்குதலை அடுத்து அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. இதன்பின்னர், காலை அவர் கைது செய்யப்பட்டதுடன் அவரை பணி நீக்கம் செய்ய புத்தளம் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஹரக் கட்டா தப்பிக்க முயன்ற விவகாரம்; பொலிஸ் சார்ஜன்ட் கைது
பிரபல பாதாள உலக குழு நபரான நடுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டா காவலில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சிக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீண்டும் பணிபகிஸ்கரிப்பில் குதிக்கும் சுகாதார தொழிற்சங்கங்கள்
72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் சுகாதார அமைச்சும் இணைந்து தயாரித்த தொழிநுட்ப அறிக்கை விரைவில் நிதி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது. தமது கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வை வழங்கத் தவறினால், சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அடுத்த வாரத்தில் இருந்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்தில் அசிட் தாக்குதல் - 5 பேர் காயம்
இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்தில், நேற்றைய தினம் அசிட் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அசிட் தாக்குதலுக்கு உள்ளான 5 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முட்டைகளுக்கான அதிகூடிய சில்லறை விலையை அறிவிக்கும் வரத்தமானி விரைவில்
முட்டைகளுக்கான அதிகூடிய சில்லறை விலையை அறிவிக்கும் வரத்தமானியை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட்ட விலை உள்ளடக்கிய யோசனை இந்த வாரத்தினுள் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சமர்ப்பிப்பதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீமானித்துள்ளது.
இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்
நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நெருங்கிய உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2022ஆம் ஆண்டில் 1,618 முறைப்பாடுகளும், 2023 ஆம் ஆண்டில் 1,639 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
IMF இன் 2ஆம் கட்ட மீளாய்வு நடவடிக்கைகள் இன்று
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் 2ஆம் கட்டமீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளனர்.
சேவை இடைநிறுத்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணியமர்வு
வெளிநாட்டவர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்வேஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து குறித்த அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
காற்றின் தரம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் கணிசமானளவு மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் வளி மாசடைவு 127 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலியில் நிறுவப்படும் சர்வதேச கிரிக்கட் விளையாட்டரங்கம்
காலியில் சர்வதேச கிரிக்கட் விளையாட்டரங்கம் ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மனூஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த கிரிக்கட் விளையாட்டரங்கில் இரவு-பகல் போட்டிகளை நடத்தும் வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் அரசியல்வாதிக்கு சபை விதிகளை மீறி பத்துலட்சம் ஒதுக்கீடு
குருநாகல் மாநகர சபையின் அரசியல்வாதியொருவருக்கு சபை விதிகளை மீறி பத்து லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கணக்காய்வில் தெரியவந்துள்ள நிலையில், சபை விதிகளுக்கு முரணாக தனிப்பட்ட ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட விவகாரத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து அரசியல்வாதிகளும் தலா ஐம்பதினாயிரம் வீதம் குறித்த பத்து லட்சம் ரூபாவை சபைக்கு மீளச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கனடாவில் தொழில்வாய்ப்புக்கான ஆசை காட்டி மோசடி செய்த நபர் கைது
கனடாவில் தொழில்வாய்ப்புக்கான ஆசை காட்டி இளைஞர்,யுவதிகளிடம் மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது கல்லூரியின் பாடநெறியொன்றைப் பயின்றால் அதன் மூலம் இலகுவாக கனடாவில் தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை காட்டி அறுபது இளைஞர் யுவதிகளிடம் ஐந்து கோடி ரூபாவை மோசடி செய்துள்ளார்.