அமெரிக்க சுற்றுலாப்பயணி நாட்டிற்கு வருகை: பெசிலை கேலிக்குள்ளாக்கும் கட்சிகள்

OruvanOruvan

Basil & Udaya Gammanpila

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பெசில் ராஜபக்ஷ, சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காகவே பெசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனியார் செய்தி சேவையொன்றிற்கு உறுயளித்துள்ளார்.

பெசில் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன இன்று செவ்வாய்க்கிழமை முதல் முதல் முழுமையாக தேர்தல் ஆயத்தங்களில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பெசில் ராஜபக்ஷ இணைவாரா என்பது தொடர்பில் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

”ரணிலை ஆட்சிபீடமேற்றி இழைத்த பிழையை பெசில் உணர வேண்டும். அவர் இன்னும் நாட்டிற்கு சிறந்த பொருளாதார திட்டத்தை முன்வைக்கவில்லை. அவரால் முன்வைக்கப்பட்ட பொருளாதார திட்டங்களும் வெற்றியளிக்கவில்லை.

2048 ஆம் ஆண்டு வரை நாம் காத்திருக்க வேண்டுமா? பெசில் ராஜபக்ஷ ரணிலின் ஆடையை கழுவுவதற்காக நாட்டிற்கு வருகைதரவில்லை. நாட்டை வீணடிக்கும் செயற்பாட்டிற்கு அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்ஷவும் பெசில் ராஜபக்ஷவும் உதவி வழங்க மாட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை“

மறுபுறம் பெசிலின் வருகை சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க பிரஜையான அவரை இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உருமய கட்சி கேலிக்குள்ளாக்கியுள்ளது.

“அமெரிக்காவில் உழைத்து இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணியையே தாம் விரும்புகிறோம் ஆனாலும் துரதிஷ்ட வசமாக இந்த சுற்றுலாப் பயணி (பெசில்) இலங்கையில் உழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா மேற்கொள்கிறார்“ என பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன் பில விமர்சித்துள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுன கட்சி வீழ்ந்த போது நாட்டிலிருந்து பெசில் வெளியேறியதை நினைவு கூர்ந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்

பெசிலின் வருகை தொடர்பில் பொதுஜன பெரமுன வெட்கமடைய வேண்டும் என கருத்து வெளியிட்டதுடன் யார் வந்தாலும் வாடிய மொட்டு ஒருபோதும் மலராது எனவும் கூறியுள்ளார்.