அச்சுறுத்தலை மீறி இந்திய எல்லைக்குள் போராட்டம்: தமிழ் மீனவர்கள் எச்சரிக்கை

OruvanOruvan

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டுவதை தடுக்கும் வகையில் இந்திய எல்லைக்குள் நுழைந்து போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக வடமாகாண மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர்கள், சவுக்கடி கடற்பரப்பில் இருந்து இலங்கை எல்லைவரை சென்று கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 20 படகுகளில்,32 மீனவர்கள் கறுப்பு கொடிகளை படகில் காட்டியவாறு கடலில் சுமார் 30 நிமிடங்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சவுக்கடி கடற்படை முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மாறும் போராட்ட வடிவம்

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தப் போவதாக மீன்பிடி சமாஜங்களின் கூட்டுறவு சங்கத்தலைவர் பிரான்சிஸ் ரட்னகுமார் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“இதற்கு முன்னரும் அத்துமீறிய இந்திய கடற்தொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி பல போராட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால் தொடர்ந்தும் அவர்களது வருகை இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தும் முகமாக கடல் வழியாக இலங்கை எல்லை வரை எமது கருப்புக் கொடிப் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

இந்தப் போராட்டம் ஒரு ஆரம்பப் போராட்டமாகவே பார்க்கிறோம். ஏனெனில் நாம் எமது கடல் எல்லை வரை போராட்டத்தை முன்னெடுத்தோம் இந்திய எல்லைக்குச் செல்லவில்லை.

இந்தியா எல்லைக்கு செல்வோமாயின் என்ன நடக்கும் என்பதும் எமக்குத் தெரியும். அது பற்றி நாம் கவலைப்பட மாட்டோம். உயிரச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.

அதற்குப் பதிலாக இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கு எமது கோரிக்கைகளை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இரு நாட்டு மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, இருதரப்பினரும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.