மின் கட்டணம் 21.9% குறைப்பு: இலங்கையின் அனைத்து முக்கிய செய்திகளும் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story

மின் கட்டணம் 21.9% குறைப்பு

இன்று (மார்ச் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிராக தடை உத்தரவு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை மார்ச் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என CPC விடுத்துள்ள கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) பிறப்பித்துள்ளது.

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு மரண தண்டனை

2005 ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பேலியகொட பொலிஸில் கடமையாற்றிய இர முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

தோட்டாவுடன் இஸ்ரேலிய யுவதி கைது

கட்டுநாயக்க, விமான நிலையத்தில் 5.56 மில்லி மீற்றர் தோட்டாவுடன் 22 வயதான இஸ்ரேலிய யுவதி ஒருவர் இன்று (04) காலை கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் இராணுவத்தில் கடமையாற்றிய குறித்த யுவதி தனது நண்பருடன் தாய் நாட்டிற்கு திரும்பும்போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜே.வி.பிக்கு நன்றித் தெரிவித்த மைத்திரிபால

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட போது ஜே.வி.பி தமக்கு ஆதரவளித்ததுடன், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்காவிட்டாலும் பல விடயங்களில் அவர்கள் ஒத்துழைப்புகளை வழங்கினர். அதனால் தாம் அவர்களை மதிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வேன் - முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் - நெதர்லாந்து நாட்டு பிரஜைகள் காயம்

நுவரெலியாவில் வேன் - முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் - நெதர்லாந்து நாட்டு பிரஜைகள் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று எதிர்த் திசையில் கண்டியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

OruvanOruvan

கொழும்பு கொட்டாஞ்சேனை கெதிட்ரல் ஆண்கள் கல்லூரிக்கு நிதியுதவி

கொழும்பு கொட்டாஞ்சேனை கெதிட்ரல் (ஆண்கள்) கல்லூரி அதிபர் மூலம் கடந்த வாரம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கல்லூரியின் நிற பூச்சு வேலை திட்டத்திற்கான வேண்டுகோளை உடனே ஏற்றுக் கொண்டு, ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் ஜனனம் அறக்கட்டளையின் "கல்விக்கு கரம் கொடுப்போம்" திட்டத்தின் ஊடாக மூன்று லட்சம் ரூபாய் பெருமதியான காசோலையை இன்று(04) கல்லூரிக்கு நேரில் சென்று வழங்கி வைத்தார்.

OruvanOruvan

Sponsorship of Colombo Cathedral Boys College

17 வயதான பாடசாலை மாணவி 30 வயதான காதலனுடன் கைது

வாத்துவை கடற்கரையில், ஐஸ் போதைப் பொருளை தம்வம் வைத்திருந்த 17 வயதான பாடசாலை மாணவியும் அவரது காதலன் எனக்கூறப்படும் 30 வயதான ஆணையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து,வாத்துவை,பொஹத்தரமுல்ல கடற்படையில் 20 மில்லி கிராம் ஐஸ் மற்றும் அதனை பயன்படுத்த உபயோகிக்கப்படும் கருவியுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.

நாளைய தினம் இலங்கை வரும் பசில் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச நாளைய தினம் இலங்கை திரும்ப உள்ளதுடன் காலை 7.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் எனவும் கட்சியை தேர்தலுக்கு தயார்ப்படுத்துவதற்காக அவர் நாடு திரும்புவதாகவும் அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.பசில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் மீட்கப்பட்ட 9 கிலோ கிராம் தங்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 9 கிலோ கிராம் தங்கம் இன்று (4) காலை கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை சுங்க ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (மார்ச் 04) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 303.81 ரூபாவாகவும், 313.41 ரூபாவாகவும் காணப்படுகிறது.

OruvanOruvan

சாதாரண தர பாட எண்ணிக்கையை ஏழாக குறைக்க தீர்மானம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழு பாடங்களாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அறிவை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மியன்மார் சைபர் மோசடி முகாமிலிருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள்

மியான்மரில் உள்ள சைபர் மோசடி முகாமில் பிணைக் கைதிகளாக இருந்த எட்டு இலங்கையர்களைக் கொண்ட குழு மீட்கப்பட்டமை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.

12 விலங்கினங்களை ஒரே இடத்தில் காண்பிக்கும் இலங்கை புகைப்பட கலைஞரின் அற்புத படைப்பு

புகைப்படக் கலைஞரான யானிக் திசேரா (Yannik Tissera) மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் 12 விலங்கு இனங்களை இணைத்து புகைப்படம் எடுத்துள்ளார். ஜனவரி மாதத்தின் மூன்று வாரங்களுக்குள் மலையக பிரதேசத்தில் ஒரு இடத்தின் வழியாக பயணிக்கும் மிருகங்கள், ட்ரப் கமரா (Trap Camera / Trail Camera) மூலம் பதிவு செய்யப்பட்ட வெவ்வேறு உயிரினங்களின் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை Focus stacking / Layer stacking முறையைப் பயன்படுத்தி பல புகைப்படங்களை இணைத்து இந்த அற்புதமான படம் உருவாக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை விபத்தில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட ஐவர் படுகாயம்

தம்புள்ளை பெல்வெஹர பகுதியில் இன்று (04) காலை தனியார் பயணிகள் பேருந்து ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் பலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

OruvanOruvan

Five including foreigners injured in bus-car collision in Dambulla

பாலியல் துஷ்பிரயோகம் - அதிபர் கைது

சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மொனராகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்றைய தினம் (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார சுதந்திரத்தில் மிக மோசமாகப் பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை

சர்வதேச நாடுகளின் பொருளாதார சுதந்திரத்திற்கான அட்டவணையில் இலங்கை மிக மோசமாகப் பின்தங்கியுள்ளது
176 நாடுகளின் தரவுகளைக் கொண்டு, ஹெரிடேஜ் பவுண்டேசன் குறித்த அட்டவணையை வௌியிட்டுள்ளது அதன் பிரகாரம் இலங்கை 149வது இடத்தில்,பின்தள்ளப்பட்டுள்ளது. பொதுவுடைமை சித்தாந்தத்தை அரச கொள்கையாகக் கொண்டுள்ள சீனா, குறித்த பட்டியலில் இலங்கையையும் விட பின்தங்கிய நிலையில் காணப்படுவது குறித்த அட்டவணையின் இன்னொரு முக்கிய அம்சமாகும்.

OruvanOruvan

சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை விவகாரம்; ஆட்சேபனை தாக்கல் செய்யவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை, கட்சியில் பதவிகளை இடைநிறுத்துவதையும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதையும் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை செல்லுபடியாக்குமாறு கோரி ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தரம் 8 முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டம் அறிமுகம்

தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த முன்னோடி திட்டம் மார்ச் 19 முதல் 20 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையும் வெப்பநிலை

இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமேல்,மேல் மற்றும் தென்,சப்ரகமுவ மாகாணங்களிலும்,அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கும் எனவும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அழைப்பு

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பில் நாளை (05) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற அமர்வுகள் மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

பாராளுமன்ற அமர்வுகள் இம்முறையும் மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தின் முதல் வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வுகள் நாளை 5 ஆம் திகதி,6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை 8ஆம் திகதி பொது விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் பாராளுமன்றம் கூடாது எனவும் அந்த பிரிவு மேலும் குறிப்பிடுகிறது.

சர்வதேச நாடுகளில் இலங்கையின் அரிசிக்கு கேள்வி அதிகரிப்பு

கென்யா - அரபு இராச்சியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இலங்கை அரிசிக்கு கேள்வி அதிகரித்துள்ளது. அதன்படி, கென்யாவிலிருந்து 10,000 மெட்ரிக் தொன் அரிசிக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கின் பல நாடுகளும் கீரி சம்பா அரிசிக்கான வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சூதாட்டத்தில் பணத்தை இழந்து போதைப்பொருள் விற்ற செல்வந்தர்கள் கைது

கெசினோ சூதாட்டத்தில் பணம் மற்றும் சொத்துக்களை இழந்த நிலையில், துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள படாவிட்ட அசங்க என்ற போதைப் பொருள் கடத்தல்காருடன் இணைந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு செல்வந்த வியாபாரிகளை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இலங்கை -மாலைத்தீவு இடையில் கூடுதல் விமான சேவைகள்

இலங்கைக்கும், மாலைதீவிற்கும் இடையிலான விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முதல் குறித்த விரிவாக்கப்பட்ட விமான சேவைகளானது ஆரம்பமாகவுள்ளன.புதிய அட்டவணையின் அடிப்படையில் மாலைதீவு மற்றும் கொழும்பிற்கு இடையில் வாராந்தம் ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு விமானங்கள் இயங்கவுள்ளன.

இன்று முதல் டிஜிட்டல் மயமாகிறது மோட்டார் வாகன போக்குவரத்து சேவை

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் இன்று முதல் டிஜிட்டல் முறைமைக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த அறிவித்தலை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க விடுத்துள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சகல கிளைகள் ஊடாகவும் வழங்கப்படும் சேவைகளுக்காக டிஜிட்டல் முறைமையின் கீழ் பதிவு செய்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

டுபாயில் மறைந்துள்ள பாதாள உலகக் கும்பல்களை கைது செய்ய விசேட நடவடிக்கை

டுபாய் நாட்டில் பதுங்கியிருக்கும் பாதாள உலக குழுவினரை அந்நாட்டிலேயே கைது செய்வது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை அந்நாட்டு பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என தெரியாத காரணத்தினால்,துப்பு வழங்குபவர்கள் ஊடாக தகவல் பெற்று அந்நாட்டு பொலிஸாரை வைத்து பாதாள உலக கும்பல்காரர்களை கைது செய்ய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோப்பியை உலகளவில் சந்தைப்படுத்த இலங்கை நடவடிக்கை

கோப்பிக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, இலங்கை கோப்பியை உற்பத்தி செய்து உலகிற்கு சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது.
இலங்கை கோப்பி பயிர்ச்செய்கைக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு 'சிலோன் கோப்பி' மூலம் ஏற்றுமதிச் சந்தையைக் கைப்பற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருள் விலையில் இன்று (04) இரவு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, எரிபொருள் விலையில் பாரியளவிலான மாற்றம் ஏற்படுத்தப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் இன்று இரகசிய வாக்குமூலம்

மருந்துக் கொள்வனவு முறைகேடு தொடர்பில் அனைத்து தகவல்களையும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று (4) மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.