நாமலின் கூட்டத்தில் பிரசன்ன உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்குபற்றவில்லை: கட்சி முரண்பாடு காரணமா?

OruvanOruvan

Namal Rahapaksa and Prasanna Ranatunga

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தசபல சேனா பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர் பிரசன்ன ரணதுங்க உட்பட 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மின்வலு,எரிசக்தி ராஜாங்க அமைச்சருமான இந்திக அனுருத்த இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித்த அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் உள்ளூராட்சி மற்று மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்களில் சிலரும் மாத்திரமே கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து கடந்த பொதுத் தேர்தலில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களில் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, நிமல் லன்சா, நளின் பெர்னாண்டோ, நாலக கொடஹேவா, லசந்த அழகியவண்ண ஆகியோர் தற்போது தனியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூ்ட்டம் காரணமாக நாமலின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை-பிரசன்ன

இந்த நிலையில், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டதால், நாமல் ராஜபக்ச தலைமையில் கம்பஹாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் பிரசன்ன ரணதுங்க உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரதுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். இதனால், அந்த கட்சிக்குள் அரசியல் முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

இந்த முரண்பாடுகள் காரணமாக பொதுஜன பெரமுன நடத்தும் சில முக்கியமான கூட்டங்களில் கலந்துக்கொள்ளாது பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக பலவீனமான வேட்பாளரை பொதுஜன பெரமுன நிறுத்தினால், கட்சியில் இருந்து விலகி,ரணிலுக்கு ஆதரவாக செயற்பட போவதாக பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.