தமிழ் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை: குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை

OruvanOruvan

வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி நடவடிக்கைககளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுகின்றமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என, வடபகுதி மீனவர்கள், கடற்படையினர் மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், உள்ளூர் தமிழ் மீனவர்களின் தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி , விகாரையின் பின்புறத்தோடு இணைந்த கடல் பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு கடற்பைடை ஒரு போதும் இடையூறு ஏற்படுத்துவதில்லை என, கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் - மாதகல் பிரதேசத்தில் இறால் பிடியில் ஈடுபட்ட சிலருக்கு முறையான அனுமதிப்பத்திரம் காணப்படவில்லை எனவும், ஆகவே அவர்களின் தொழில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.