சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மன்ன ரமேஷ் டுபாயில் சிக்கினார்: இலங்கைக்கு அழைத்துவர பொலிஸார் முயற்சி

OruvanOruvan

Manna Ramesh Arrest

சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கை பாதாள உலக கும்பலின் தலைவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் இருந்து டுபாய்க்கு தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, ​​ஷார்ஜா பொலிசார் காரை நிறுத்த உத்தரவிட்ட போதும் உத்தரவை மீறிச் சென்றமைக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பாதாள உலகக் கும்பலின் தலைவனாகவும் போதைப்பொருள் வியாபாரியாகவும் கருதப்படும் அதிகாரம் முத்யன்சேலாவின் ரமேஷ் பிரிஜானக்க என்ற மன்ன ரமேஷ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பேது, அவரது மனைவியும் நேற்று கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காரில் போதைப்பொருள்

மன்ன ரமேஷ் ஓட்டிச் சென்ற காரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே ஷார்ஜா பொலிசார் குறித்த காரை நிறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து, அவரை சோதனையிட்ட போது அவர் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பது உறுதியாகியுள்ளது.

மன்ன ரமேஷ் மீது 10க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாக இலங்கை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதி முயற்சி

இவ்வாறான நிலையில், மன்ன ரமேஷை பொலிஸாரிடம் சிக்க வைப்பதற்காக மற்றுமொரு பாதாள உலகக் குற்றவாளி வழங்கிய போலியான தகவல் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அவிசாவளை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் மன்ன ரமேஷ் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

மேலும் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி இரவு, மரண இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக முச்சக்கர வண்டியில் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் மன்ன ரமேஷின் அடியாட்களால் தல்துவவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நாட்டிற்கு அழைத்துவர முயற்சி

இவ்வாறான நிலையிலேயே அவிசாவளையில் பாதாள உலக பயங்கரவாதத்தை பரப்பி வரும் குற்றவாளியை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஷார்ஜா பொலிஸாருடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இதே இரகசிய தகவலின் அடிப்படையிலேயே டுபாய் பொலிஸாரினால் பாதாள உலகக் குழுவின் பலமான மற்றுமொரு தலைவராக இருந்த மாகந்துரே மதூஷும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.