ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...

OruvanOruvan

Short story 01.03.2024

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

துன்முல்ல, பிலிப் குணவர்தன மாவத்தையில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குருந்துவத்தை பொலிஸாரால் இன்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வந்தடைந்த ரஷ்யக் கப்பல்

ரஷ்ய கடற்படைக் கப்பல் வர்யாக் (Varyag) இன்று உத்தியோகபூர்வ பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

The Russian Naval Ship Varyag

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் கைது

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க வெள்ளிக்கிழமை மாலை (01) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

க.பொ.த (சா/த) 2023 பரீட்சைகள் 2024 மே 06 முதல் 15 வரையிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் 2024 செப்டம்பர் 15 ஆம் திகதியிலும் மற்றும் க.பொ.த (உ/த) 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது - இலங்கை பரீட்சைகள் திணைக்களம்

OruvanOruvan

GCE A/L, O/L & Grade 5 exam dates announced

உள்ளூர் முட்டை விலை குறையும் சாத்தியம்

உள்ளூர் முட்டை விலை இன்னும் இரண்டு வாரங்களில் குறையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு

கடந்த வருடம் இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஏழாம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மற்றுமொரு முன்னாள் இராணுவ அதிகாரி ஐ.மக்கள் சக்தியில் இணைந்தார்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் லெப்டினட் கேர்ணல் கலாநிதி டப்ளியூ.டப்ளியூ. ரத்னபிரியபந்து, இன்று எதிர்க்கட்சி தலைவரின் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டார். ரத்னபிரியபந்து,ஐக்கிய மக்கள் சக்தியில் அண்மைய காலத்தில் இணைந்துக்கொண்ட மூன்றாவது முன்னாள் இராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

பிரதான நிறுவனமொன்று கொழும்பு பங்குச்சந்தையில் இருந்து விலகியுள்ளது

கொழும்பு பங்குச்சந்தையின் மிகப்பெரிய மூலதனத்தை கொண்டுள்ள எக்ஸ்போ லங்கா, பங்குச்சந்தையின் உத்தியோகபூர்வ பட்டியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளது. நிறுவனத்தில் 80 வீதமான பங்குகளை கொண்டுள்ள ஜப்பான் நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும்

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும் எனவும் தமது அரசாங்கத்தின் கீழ் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி அந்த பதவி ஒழிக்கப்படும் எனவும் ஜேவிபியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.தேர்தலில் தோல்வியடையும் அச்சத்தில் ஆட்சியாளர்கள் பல்வேறு தந்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகளை வார்த்தைகளுக்குள் ஒழிக்க முயற்சிக்கும் ஆட்சியாளர்கள்

நாடு சிக்கியிருந்த பல பாரிய நெருக்கடிகளில் இருந்து ரணில்-ராஜபக்ச அரசாங்கம் நாட்டை மீட்டுள்ளதாக தற்போதைய ஆட்சியாளர்கள் கூறுவதாகவும் இவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை நெருக்கடிகள் முடிவுக்கு வராது எனவும் ஆட்சியினர்கள் நெருக்கடிகளை வார்த்தைகளுக்கு ஒழித்து வைக்க முயற்சிப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக மனுத்தாக்கல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சஜித் அணியின் பலர் ஐ.தே.கட்சியில் இணைக்கின்றனர்-ரங்கே பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியல் அங்கம் வகிக்கும் பலர் எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைவர்கள் எனவும் இது சம்பந்தமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன என்றும் இதனால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைப்பு

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்றுள்ளார்.தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் விசாரணை செய்வதற்கு தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அண்மைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் விசாரணை செய்வதற்கு இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 05 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை விசாரணைக்காக அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் மொட்டுக்கட்சி எடுத்துள்ள முடிவு

சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மேலதிக வாக்குகளால் தோற்கடிக்க பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது. அந்த கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் உறுப்பினர்கள் குழுவும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அஹுங்கலயில் துப்பாக்கி பிரயோகம் ; ஒருவர் பலி

அஹுங்கல்ல பகுதியில் சற்றுமுன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவசரமாக மத்திய குழுக் கூட்டத்தை கூடுகிறது சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் தேர்தல், சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை வாக்களிக்க அனுமதிக்கும் கோரிக்கை பரிசீலனை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையினை தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது - முதித பீரிஸ் தெரிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் பெப்ரவரி மாதம் அதிகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரியநீலாவணையில் பாடசாலை வான் மோதி 4 வயது குழந்தை பலி

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஷ்ணு வித்தியாலய வீதி பகுதியில் பாடசாலை வான் ஒன்று மோதி 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி சட்டத்துடன் விளையாடுகிறார்-டளஸ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தின் ஆதிபத்தியத்தை சவாலுக்கு உட்படுத்தி, அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை விளையாட்டாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் ஜனநாயகத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியாவது,ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் தேவையாக இருக்கின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பம் வெளியீடு

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கீழ்காணும் இணைப்பின் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். 👇

https://ceylonvacancy.com/application-for-courses-in-srilanka/online-application-for-national-college-of-education-teacher-training-programme-2023/

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 4.4 வீதமாக வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாணய அலகுகளுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளது.

மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களினால் எழுதப்பட்ட மனுவொன்று மியான்மர் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கள் - சுகாதார அமைச்சர் கலந்துரையாடல்

சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை கலந்துரையாடவுள்ளார். சுகாதார தொழிற் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

தென் மாகாணத்தில் இன்று துக்க தினம்

தென்னிலங்கையின் கல்வித்துறையில் கல்விப்புரட்சியொன்றை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்லின் இறுதிக் கிரியைகள் இன்று மாத்தறையில் நடைபெறவுள்ள நிலையில், வௌ்ளிக்கிழமை தினத்தை தென் மாகாண எல்லைக்குள் துக்க தினமாக பிரகடனப்படுத்தி மாகாண ஆளுனர் விலி கமகே உத்தரவிட்டுள்ளார்.

இன்று இலங்கைக்கு கொண்டு வரப்படும் சாந்தனின் உடல்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான சாந்தனின் பூதவுடல், எம்பார்மிங் செய்யப்பட்டு விமானம் மூலம் இன்று இலங்கை எடுத்து வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானம்

பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

OruvanOruvan

பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வெப்பமான காலநிலை நிலவும் என பல மாகாணங்களுக்கும் மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் இரத்தினபுரி மற்றும் மன்னார் மாவட்ட மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பேரீச்சம் பழங்களுக்கான விசேட பண்ட வரி குறைக்கப்படும்

ரமழான் காலத்திற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழங்களுக்கான விசேட பண்ட வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.