தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டம் விரைவில்: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டம் விரைவில்
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
கெஹலியவைவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் அமைச்சனின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளையை மாளிகஹந்த நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
வெப்பம் தொடர்கிறது: 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
வடமேற்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்தை விட அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்
கெஹலியவைப் பார்வையிட்ட மஹிந்த ராஜபக்ஷ
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவைப் பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்துள்ளார். வெலிகட சிறைச்சாலையின் மருத்துவமனையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல் வேலைவாய்ப்பு: 1700 இலங்கையர்கள் முதல் சுற்று தேர்வில் தேர்ச்சி
இஸ்ரேலில் நிர்மாணத் துறையில் பதவிகளுக்காக நடத்தப்பட்ட முதற்கட்ட திறன் சோதனைகளைத் தொடர்ந்து மொத்தம் 1700 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் வீழ்ச்சி
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த மாதத்தில் பணவீக்கம் 5.9 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் 3.3 வீதமாக காணப்பட்ட உணவுப் பணவீக்கம் இந்த மாதத்தில் 3.5 வீதமாக அதிகரித்துள்ளது.
அஸ்வெசும பயனாளர்களுக்கு நிவாரணம்
அஸ்வெசும பயனாளர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உத்திக பிரேமரத்னவின் இடத்துக்கு எஸ்.சி.முத்துகுமாரன நியமனம்
அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பயன்படுத்திய கொழும்பு பெஜெட் வீதியில் உள்ள ஆடம்பர வீட்டை ஓய்வுபெற்ற பின்னரும் அவரது பயன்பாட்டுக்காக வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
சி.ஐ.டி.க்கு எதிராக கெஹலிய மனுத் தாக்கல்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சார்பில் இன்று (29) அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சி.ஐ.டி.யினரால் தாம் கைது செய்யப்பட்டதை சவாலுக்குபட்படுத்தி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முதல் வனவிலங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நாளை முதல்
யானை-ரயில் மோதலை தடுக்கும் வகையில் இலங்கையின் முதல் வனவிலங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நாளை முதல் கல்கமுவ,கட்டாதிவுல பகுதிகளில் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் உத்தரவு
சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரின் உடலை கொண்டுசெல்ல இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று,பயண ஆவணம் உள்ளிட்டவற்றை பெற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு
எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி முதல் நாட்டில் உள்ள எந்தவொரு மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திலும் சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வது கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நிறுவனம் ஒன்றில் பெண் கணக்காளர் மீது தாக்குதல்
நுகேகொடை, நாவல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த குழுவொன்று நிறுவனத்தில் ஏற்பட்ட உள்முரண்பாடு காரணமாக அந்த நிறுவனத்தின் பெண் கணக்காளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த கணக்காளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான வரி குறைப்பு
ரமழான் பண்டிகையை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான விசேட சரக்கு வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கெஹெலிய நீதிமன்றில் முன்னிலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். தரமற்ற இம்யுனோகுளோபியுலின் தடுப்புசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கெஹெலியவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது.
தேசிய பலசரக்கு ஏற்றுமதி ஊடாக 15 கோடி ரூபாவுக்கும் அதிக இலாபம்
தேசிய பலசரக்கு ஏற்றுமதி ஊடாக கடந்த வருடத்தில் 15 கோடி ரூபாவுக்கும் அதிக இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரொனி டி மெலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.இலங்கை அரசியல் வரலாற்றில் ரொனி டி மெல் 11 ஆண்டுகள் தொடரை்ச்சியாக நிதி அமைச்சராக பதவிவகித்தார். அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் நம்பிக்கைக்கு உரியவர். இவருடைய காலத்திலேயே யுத்தமும் ஆரம்பிக்கப்பட்டது.
முஷாரப் எம்.பி.யின் பதவியைப் பறிக்க முடியாது
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் இன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020 இல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 20ம் திருத்தச்சட்டம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டு குறித்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்திருந்தார்.இதன் காரணமாக முஷர்ரப்பை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னரே வேட்பாளர்கள் களம் இறங்குவர் - உதய கம்மன்பில
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதி தயாராகி வந்த போது, ஜே.வி.பியினரால் அதனை புரிந்துக்கொள்ள முடியாமல் போனது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் வாகன விபத்து - ஒருவர் பலி
தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (29) இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு தனியார் பேருந்துகள் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரூபாவின் இன்றைய பெறுமதி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நிலையாக காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 304 ரூபா 25 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 314 ரூபா 86 சதமாக பதிவாகியுள்ளது.
520 அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
520 அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை தழுவிய நிர்மாண அபிவிருத்தித் திட்டங்களும், நிர்மாணங்களின் தொடர்ச்சியும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பொதுச் சேவை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட போதைமாத்திரைகள் மீட்பு
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 53,000 போதைமாத்திரைகள் நேற்று (28) மன்னார் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைமாத்திரைகளை கடத்துவதற்காக யாரேனும் அந்த இடத்தில் மறைத்து வைத்திருக்கலாம் என விசேட அதிரடிப்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சுமந்திரனின் மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த மனுவைத் தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீலங்கனை விற்பனை செய்ய விலைமனு கோரப்படுகிறது
ஸ்ரீலங்கன் விமான சேவையை முதலீட்டாளருக்கு விற்பனை செய்வதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதி விலைமனுக்கள் திறக்கப்பட உள்ளதுடன் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முதலீட்டாளர்கள் விலைமனுக்களை சமர்பிக்கலாம் எனவும் அவற்றை தொழிற்நுட்ப குழுவினர் மீளாய்வு செய்த பின்னர்,அவை அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் குறித்து இன்று இறுதி முடிவு
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (28) கூட்டம் நடத்திய போதிலும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் கலைந்து சென்றதுடன் இன்று (29) அது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரணிலே தேர்தலில் வெற்றி பெறுவார்-பிரசன்ன ரணதுங்க
முகநூல் ஜனாதிபதி மற்றும் வாய்சவட்டு ஜனாதிபதி மாத்திரமே தேர்தல் இன்றி ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளதாகவும் எனினும் ரணில் விக்ரமசிங்கவே தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவிக்கு வருவார் எனவும் ரணில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டால் மிகவும் நல்லது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கிராம சேவையாளர் நேர்காணலுக்கான திகதி அறிவிப்பு!
கிராம சேவையாளர் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை , 2024 மார்ச் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடத்தப்படும் - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த
எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கை வரும் பசில் ராஜபக்ச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக அவரது உறவினரான ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து துபாய் ஊடாக அவர் அன்றைய முற்பகல் 11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாகானந்த கொடிதுவாக்கு சட்டத்தரணி பதவியிலிருந்து விலகினார்
நாகானந்த கொடிதுவாக்கு வை சட்டத்தரணியாகப் பதிவு செய்வதை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (29) இரத்து செய்தது.
ஜனாதிபதி தேர்தல்; செப். 18 - ஒக். 18 இடையில் தீர்க்கமான தீர்மானம்
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி செப்டம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்கு இடையில் தீர்மானிக்கப்படும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி உள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
32 வயதான குடும்பஸ்தர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்
வெலிபென்ன,ஹொரவல,மல்வத்துகந்த பெலகெட்டியகொட பிரதேசத்தில் நேற்றிரவு 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட நபர் வீதிக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அந்த இருவரில் ஒருவர் வீதியில் நின்றிருந்த நபரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் இருவரும் மூன்று முறை கத்தியால் குத்தியுள்ளனர்.
பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற தேசபந்து தென்னகோன்
36 ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரட்ன கடந்த வருடம் மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில் அவரது பதவி 4 தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தன. தற்போது புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து பொறுப்பேற்றுள்ளார்.
இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்தவர்கள் கைது
இத்தாலி தூதரகத்திற்கு சேவைகளுக்காக செல்லும் நபர்களை அந்நாட்டுக்கு தொழிலுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்ட நாராஹென்பிட்டியை சேர்ந்த 50 வயதான பெண் மற்றும் 52 வயதான ஆணை கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸார் நேற்று(28)கைது செய்துள்ளனர்.இத்தாலி தூதரகம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்ட இந்த நபர்கள்,26 லட்சம் ரூபாவை மோடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் இன்றும் அடையாள வேலை நிறுத்தம்
சம்பளப் பிரச்சினையை சுட்டிக்காட்டி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் இன்றும்(29) அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. நேற்று(28) ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போலியான தகவல்கள் மூலம் அஸ்வெசும நலன்களை பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
உண்மைக்கு புறம்பான தகவல்கள் மூலம் அஸ்வெசும நலன்களை பெற்ற சுமார் 7000 பேர் பயனாளர்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும்அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய பொலிஸ்மா அதிபர்
புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் சற்று முன் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டார்.
சியம்பலாண்டுவயில் பேரூந்து கவிழ்ந்து விபத்து - 36 பேர் காயம்
மொனராகலை சியம்பலாண்டுவ பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிபர் சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது
அதிபர் சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள்ம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை காண கீழ்காணும் லிங்கின் ஊடாக அறிந்து கொள்ளலாம்.
👇
சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான உடல் ஊனமுற்ற சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசாங்கத்திடம் தஞ்சம் கோரிய உத்திக
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த உத்திக பிரேமரத்ன கனடாவுக்கு சென்று அந்த நாட்டு அரசாங்கத்திடம் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காஸா சிறுவர் நிதியத்துக்காக நன்கொடை செய்ய விரும்புபவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
காஸா சிறுவர் நிதியத்துக்காக நன்கொடை செய்ய விரும்புபவர்கள் ஏப்ரல் 11ஆம் திகதிக்கு முன்னர் நிதியை கையளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (29) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பல மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.