பசில் ராஜபக்சவே மொட்டு கட்சியின் பிரதமர் வேட்பாளர்: முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா?

OruvanOruvan

Basil SLPP PM candidate

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை இலக்காக்கொண்டு பசில் ராஜபக்ச அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி பசில் ராஜபக்ச இலங்கைக்கு வரும் போது மாபெரும் வரவேற்பு அளிக்கப்படும் எனவும், வாகன அணிவகுப்புடன் அவர் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்துவரப்படுவார் எனவும் உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்தி வரும் நிலையில், உதயங்க வீரதுங்க வெளிப்படுத்தியுள்ள கருத்து நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தேர்தலை அடிப்படையாகக் கொண்டே பசில் ராஜபக்ச இலங்கை வருவதுடன், மொட்டு கட்சியின் பொது வேட்பாளராக அவரையே களமிறக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை உதயங்கவின் பதில்களில் இருந்து திட்டவட்டமாக தெரியவருகிறது.

இதன்படி, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்தியாயம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதுடன், தொடர்ந்து ஆட்சி கதிரையை கைப்பற்றும் முயற்சியிலே குடும்ப சகிதம் காய்நகர்த்தி வருகின்றனர் என்பதும் தெளிவாகின்றது.

ரணிலுக்கு மொட்டு கட்சி ஆதரவளிக்காது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க மகிந்த மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் தயாராக இல்லை என உதயங்க வீரதுங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரணில் ஊடாக பயன்பெறும் சிலருக்கு மகிந்த மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதியுடன் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும், அத்தகையவர்கள் அவருக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதுடன், ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு மொட்டு கட்சியினர் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதையும் உதயங்க மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதே நிலைப்பாட்டுடனேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார். மொட்டு கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் எனவும், அந்த வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க இல்லை எனவும் நாமல் தெரிவித்திருந்தார்.

ஆகவே, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கான சாத்தியமே அதிகம் காணப்படுகின்றது.