இலங்கையில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மீன்: ஆராச்சியில் வெளிவந்த ருசிகர தகவல்

OruvanOruvan

Gymnothorax polyuranodon

Gymnothorax polyuranodon எனப்படும் அரியவகை மீன் இனம் 84 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிங் கங்கையின் வக்வெல்ல பகுதியில் இந்த மீன் இனத்தின் ஒரு மாதிரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரியல் ஆய்வாளர்களான பெர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹிரண்ய சுதசிங்க , வைல்ட் ஐலண்ட் அறக்கட்டளையின் தரிந்து ரணசிங்க மற்றும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த லூகாஸ் ருபேர் (பெர்ன் இயற்கை அறிவியல் அருங்காட்சியகம்) ஆகியோரைக் கொண்ட ஆய்வுக் குழவொன்றே இந்த மீனைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இது சர்வதேச அறிவியல் இதழான Zootaxa ஆல் வெளியிடப்பட்டது. இந்த மீன் இனம் இலங்கையிலிருந்து முதன் முதலில் 1937 இல் இரத்தினபுரியில் அடையாளம் காணப்பட்டது.

ஆனால் இந்த இனம் மீண்டும் இலங்கையில் பதிவாகவில்லை.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில், வக்வெல்ல பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இந்த மீன் இனத்தை கண்டுள்ளார்.

இதையடுத்து இந்த மீன் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மாதிரியின் மரபணு பண்புகளை ஆராய்ந்த பிறகு, இது ஜிம்னோதோராக்ஸ் பாலியூரனோடான் இனத்தைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.

பொதுவாக இந்த மீன் இனம் உவர்நீரில் வாழும் இயல்பைக் கொண்டது.

ஆனால் மிக அரிதாக நன்னீரில் காணப்படுகின்றன.

இந்தோனேசியாவின் ஃபிஜி தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல நதிப் படுகைகளில் இந்த மீன் இனம் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.