வழக்குகள் ஈழத்தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த அடி: சிறிதரனுடன் ஒருமித்த குரலாக கஜேந்திரகுமார் பயணிப்பாரா?

OruvanOruvan

Gajendrakumar Ponnambalam and Sivagnanam Shritharan

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு யார் காரணம் என்பது பகிரங்கமாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில், புதிய தலைவர் எஸ்.சிறிதரன் அதனைப் பக்குவமாகக் கையாண்டு வருவதாகப் பலரும் நம்புகிறார்கள்.

ஆனாலும் சில முடிவுகளை ஆரம்பத்தில் இருந்தே சிறிதரன் துணிவோடு மேற்கொண்டிருந்தால், பொதுச்சபைத் தீர்மானத்துக்கு எதிராக எவருமே வழக்குத் தாக்கல் செய்யும் நிலைமை எழுந்திருக்காது.

இருந்தாலும் நீதிமன்றம் என்பதால் ”சட்ட ரீதியாக அணுகுவோம்” என்ற மனநிலையில் சிறிதரன் செயற்பட்டிருக்கக்கூடும்.

ஆனாலும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்றம் என்பதைப் பகிரங்கப்படுத்தி, வழக்குத் தாக்குதல் செய்தவர்களின் கொழும்புத் தொடர்பாடலையும் பிரித்தாளும் தந்திரோபாயத்தின் ஆபத்துகளையும் சிறிதரன் மக்களிடம் கொண்டு சென்றிருக்கலாம்.

ஜீ.ஜி.பொன்னம்பலம்

எவ்வாறாயினும் ஜீ.ஜி.பொன்னம்பலம் காலத்தில் இருந்து இன்றுவரை தமிழர் அரசியல் சூழலில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பலரும் தத்தமது தேவைகளை மாத்திரம் கருத்தில் எடுத்துக் கொழும்பு அரசியலுடன் மறைமுக இணக்கத்தோடு இயங்கி வருகின்றனர் என்பது இங்கே வரலாறு.

வாக்கெடுப்பில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்ட குகதாசன் ஒரு வருடத்திற்கு சுழற்சி முறையில் அல்லாது, பொதுச் செயலாளராக இரண்டு வருடங்களும் பதவி வகிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

சிறிநேசன் பொதுச் செயலாளராக வந்துவிடக் கூடாது என்ற பின்னணியோடுதான் இந்த இரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதும் பகிரங்கமானது.

பொதுச்சபையின் தீர்மானத்துக்கு அமைவாகக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டுமாக இருந்தால், குகதாசன் இரண்டு வருடங்களும் தொடர்ச்சியாகப் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் இரண்டு வழக்குகளும் வாபஸ் பெறப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த நிபந்தனை, வழக்குகளைத் தொடுத்தவர்களின் பின்னணியில் இருப்பது யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனாலும் வழக்கு இன்னமும் வாபஸ் பெறப்படவில்லை. சிலவேளை நீதிமன்றம் சென்று நிபந்தனைகளை முன்வைத்து ஒப்புக்கொண்ட பின்னர் வழக்கு வாபஸ் பெறப்படலாம்.

வாபஸ்பெறும் சந்தர்ப்பங்கள்

இரு தரப்பும் ஒரு முடிவுக்கு வந்த பின்னர் நீதிமன்றம் செல்லாமலேயே வழக்கை வாபஸ்பெறும் சந்தர்ப்பங்களும் உண்டு.

ஆகவே, இச் செயற்பாடுகளும் நிபந்தனைகளும் தமிழரசுக் கட்சிக்கு அல்ல. மாறாக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் சுயமரியாதைக்கும் விழுந்த அடியாகவே கருத வேண்டும்.

ஏனெனில் அரசியல் விடுதலை வேண்டி எண்பது வருடங்கள் போராடி வரும் சமூகம் ஒன்றின் அரசியல் பிரதநிதிகள் எனப்படுவோர், 2009 மே மாத்திற்குப் பின்னரான சூழலில் அமெரிக்க - இந்திய அரசுகளின் செல்லப் பிள்ளைகளாகவே செயற்பட்டு வருவதன் வெளிப்பாடுகள்தான் இவை.

இதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விதிவிலக்கல்ல.

ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகள் தமிழரசுக் கட்சியின் உள்ளக மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. தத்தமது கட்சிகளைப் பலப்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடனும் இருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக எல்லாமே தேர்தல் கட்சிகள்தான். ஆகவே இக் கட்சிகளை புறமொதுக்கிவிட்டுத் தேர்தல் வியூகங்கள் அற்ற தேசிய இயக்கம் ஒன்றை உருவாக்க மக்கள் முன்வர வேண்டிய ஜனநாயக வழிக் காலமிது.

அதேநேரம் தமிழரசுக் கட்சி உறுதியோடு மீண்டும் மேலெழும்பி வரவேண்டுமானால், அது சிறிதரனின் தற்துணிவில் தங்கியுள்ளது.

அதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னை ஒரு தேசிய இயக்கமாக அடையாளப்படுத்த வேண்டுமானால், சிறிதரன் தலைமையிலான தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்போம் என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

கட்சிகள் வேறாக இருந்தாலும் தமிழ்த்தேசியக் கொள்கை என்பது ஒரு புள்ளியில் இருப்பதற்கு ஒருமித்த குரல் மூலமான இயங்குதளம் இங்கே முக்கியமானது.