ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முடிவை மொட்டுக்கட்சி எடுக்கவில்லை: எமது கூட்டணியின் ஊடாகவே அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்-நாமல் ராஜபக்ச

OruvanOruvan

Namal Rajapaksa MP Getty Images

அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கூறினாலும் அது கட்சியின் நிலைப்பாடு அல்ல எனவும் பொதுஜன பெரமுனவின் விரிவான கூட்டணியின் ஊடாகவே நாட்டின் அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி நெல்லிகலவில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், எது எப்படி இருந்தாலும் நாட்டின் அடுத்த ஜனாதிபதி பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் ஊடாக தெரிவு செய்யப்படுவார் எனக்கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது

ஜனாதிபதியுடன் அமைச்சரவையில் இருக்கும் எமது கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஜனதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனக்கூறுகின்றனர்.

அதேபோல் வேறு சிலர் இன்னும் சில பேரின் பெயர்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து நாங்கள் அவசரப்பட தேவையில்லை.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிக்கின்றோம்.

தனிப்பட்ட நிலைப்பாடுகளை வெளியிடும் சுதந்திரம் எமது கட்சியில் இருக்கின்றது. வேறு கட்சிகளில் கட்சிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டால், கட்சியில் இருந்தும் நீக்குவார்கள்.

அமைச்சரின் ஹரின் கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல

இலங்கையின் இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேலியாக கூறியிருப்பார் என்றே நான் நினைக்கின்றேன்.

அமைச்சரின் அந்த கருத்தில் முதிர்ச்சி இல்லை என்பது போல் அது சம்பந்தமாக கேள்வி எழுப்பும் நபர்களின் முதிர்ச்சி தொடர்பாகவும் பிரச்சினைகள் இருக்கின்றன.

முதிர்ச்சியில்லை என்றே நான் நினைக்கின்றேன்.எனினும் அது அரசின் நிலைப்பாடு அல்ல என்பதால், அது பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

நிகழ்நிலைக் காப்புச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் சபாநாயகர் கையெழுத்திட்டார்

நிகழ்நிலைக் காப்புச்சடடத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார் என்று எதிர்க்கட்சி குழப்பம் ஏற்படுத்துகின்றன.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே சபாநாயகர் அதில் கையெழுத்திட்டார்.

திருத்தங்களை செய்ய உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை பெற காலஅவகாசம் வழங்கப்பட்டது.

அதற்கு பின்னர் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு அமைய சபாநாயகரால் செயற்பட முடியாது.

சிக்கலான நிலைமைகள் இருந்தால், சபாநாயகர், சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தீர்மானத்தை எடுக்கலாம் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.