தமிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்திய இந்திய மீனவர்கள்: குற்றஞ்சாட்டிய இலங்கை மீனவர்கள்; வலுக்கும் எதிர்ப்பு

OruvanOruvan

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னார் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“எங்களுடைய வரிப்பணத்திலேயே தமிழக முகாம்களில் உள்ள மக்களுக்கு சோறு போடுகின்றோம் என இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழே குறித்த அகதி முகாம்களை இந்திய அரசாங்கம் பராமரித்து வருகின்றது என்பது நாம் அறிந்த உண்மையே.

மீனவர்கள் பிரச்சினைகளுக்காக எம் உறவுகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்திய மீனவர்கள் விடயத்தில் எமது இறைமையை மீறாதீர்கள் என்பதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். தமிழக மீனவர்கள் விடயத்தில் இலங்கை மீனவர்கள் பொறுப்புடனே செயற்படுகின்றனர்.

இலங்கையின் நட்பு நாடே இந்தியா. இந்திய அரசின் நிதி உதவி மற்றும் முதலீடுகள் என்பன இலங்கை மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைகின்றது. தொப்புக்கொடி உறவுகளாகவே இந்திய மக்களை நாம் எண்ணுகின்றோம்.

ஆனால் தமிழக மீனவர்களோ எங்களை பிரிதொரு கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதை எமரிடடடின் கருத்து தெளிவுப்படுத்தியுள்ளது.

வட பகுதி கடல் பரப்புக்குள் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை காணப்படுகின்றது. இருப்பினும் அண்மை காலமாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்படும் மீனவர்களின் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கை நாட்டின் சட்டம் இலங்கை மக்களுக்கும் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் பொதுவானது.எம்மால் தலையீடு செய்யமுடியாது.

எனவே மீனவ பிரச்சினைக்கு தீர்வுக்காணாமல், இடம் பெயர்ந்து தமிழக முகாம்களில் உள்ள மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடப்பட்டிருப்பதை எம்மால் ஏற்க முடியாது.

இது தொடர்பில் அரசியல் பிரதிநிதிகள், இந்திய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். தற்போது இந்திய துணைத் தூதரக அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும். மன்னிப்புக்கோர தவறும் பட்சத்தில் இந்திய உதவிகளை புறக்கணிக்கும் நிலைமை உருவாகும்” என என்.எம்.ஆலம் மேலும் தெரிவித்தார்.