சிறுவர்கள் சினிமா பாடல் காட்சிகளில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமா?: மாணவர்கள் மற்றும் பெற்றோரை அச்சுறுத்தும் பதிவு
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் 8 மாதங்களில் மாத்திரம் சிறுவர்களுக்கு எதிராக 7,523 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதனிடையே, இலங்கையில் சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தும் காணொளி இணையத்தில் பரவி வருவதாக அமெரிக்காவின் காணாமல் போன மற்றும் சுரண்டலுக்குள்ளான குழந்தைகளுக்கான சர்வதேச மையம் (NCMEC) அண்மையில் இலங்கை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது.
அத்துடன், 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், 16 வயதுக்கும் குறைந்த 6,307 சிறுமிகள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தள பாவனை குறிப்பிடப்படுகிறது.
இந்த பின்னணியில், "இணையதளம் மூலமாக சிறுவர்கள் சீர்கெட்டு செல்வதால் 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் காதல் பாடல்கள் மற்றும் கல்வி சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளை செய்ய வைக்கும் பெற்றோர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன், வீடியோ செய்த சிறுவர்களுக்கு இரண்டு வருட சீர்திருத்தப்பள்ளியும் வழங்கப்படும் " என்ற பதிவொன்று சமூக வலைதளங்களில் பெரும்பாலானோரால் பகிரப்பட்டு வருகின்றது.
அரச இலச்சினையுடன் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக வெளியீடு எனக்கூறி இந்தப் பதிவை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டிய தேவை எழுந்த நிலையில், இது போலியாக தயாரிக்கப்பட்ட அறிவிப்பு என்பதை factseeker உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறான அறிவிப்பொன்றை அரசாங்கம் விடுக்கவில்லை எனவும், அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் அமைச்சரவையில் கூட எட்டப்படவில்லை எனவும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகச் செயலாளர் எச்.டி.குஷான் சமீரவிடம் factseeker வினவிய நிலையில், கல்வி அமைச்சினால் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இவ்வாறு பகிரப்படும் அறிக்கை போலியானது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே அரசாங்கத்தின் அறிவிப்பு என பகிரப்படும் இந்த பதிவானது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.