செயலிழந்து கிடக்கும் அரசாங்க சேவைகளின் தொலைபேசி இணைப்புகள்: அசௌகரியத்தில் பொதுமக்கள்

OruvanOruvan

Srilankan government services

அரச நிறுவனங்கள் என்பன பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் அவர்களுக்கான சேவைகளை வழங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டவை ஆகும்.

எனினும், கடைமையை சரிவர செய்யத் தவறிய , செயலற்ற தன்மையுடன் செயற்பட்டு வரும் அரச சேவைகளைப் பற்றி ஆராயப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இலங்கை தீவில் அரசாங்க சேவைகளை வழங்கி வரும் அதிகாரிகள் மூலம் பொது மக்களுக்கு அவசியமான நேரத்தில் தொடர்பு கொள்ள வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இணைப்புகள் பல செயலிழந்து கிடப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர்களான வசந்த அத்துகோரள மற்றும் பேராசிரியர் மாலக ரணதிலக என்பவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தி ஞாயிறு சிங்கள பிரதான வார இதழ் ஒன்றின் முன் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியவாறு பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர்கள் , சமூர்த்தி சேவகர்கள் 589 பேரின் தொலைபேசி இணைப்புகள்தொடர்பில் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அரச அதிகாரிகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் 49 வீதமானவை செயலிழந்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் , 22 வீதமான தொலைபேசி எண்கள் செயல்பாட்டில் காணப்படினும் அழைப்பை ஏற்க மறுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அரச அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் 29 வீதமானவை மட்டுமே தொடர்பு கொள்ளக்கூடியதாக உள்ளன.

276 பிரதேச சபைகளுள் 98 பிரதேச சபைகள் குறித்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

அவற்றுள் 14 வீதமான தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் 41 வீதமான பதிலளிக்காத தொலைபேசி இணைப்புகள் காணப்படுவதாகவும் 45 வீதமானவை பதிலளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் காணப்படக்கூடிய 24 நகர சபைகளுள் 23 இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 4 வீதமானவை செயலிழந்து காணப்படுவதுடன் 43 வீதமானவை அழைப்பை ஏற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன ரீதியில் தெழிநுட்பங்கள் வளர்ச்சியடைந்து வரக் கூடிய ஒரு காலக்கட்டத்தில், நாடளாவிய ரீதியில் தொலைபேசி பாவனை என்பது உயரிய மட்டத்தில் காணப்படக்கூடிய யுகத்தில் அரச நிறுவன அதிகாரிகளை தொடர்புகொள்ள தொலைபேசி இணைப்புகள் குறுக்கிடுவது பொதுமக்களை பெரும் அசௌகரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அரச நிறுவனங்களின் செயலற்ற தன்மை வெளிக்கொணரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.