இனங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையை பிரித்து அரசியல் செய்ததால் நாட்டில் சமாதானம் இல்லாமல் போய்விட்டது: அரசியல்வாதிகளை சாடும் விஜயதாஸ ராஜபக்ஸ
நாட்டை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுவிப்பதற்காக தமிழர், சிங்களவர் பறங்கியர், முஸ்லீம்கள் மலேயர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து 1948ஆம் ஆண்டில் சுதந்திரத்தை பெற்ற போதும் இந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்து நாசமாக்கி அரசியல் செய்தார்கள் இதனால் நாட்டில் சமாதானம் இல்லாமல் போய்விட்டது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.
எமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு சங்கங்களுக்கு மாவட்ட மட்ட ஆலோசகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் நீதி அமைச்சர் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கடந்த 40 வருடத்துக்கு மேலாக அரசியல் குழப்பம் காரணமாக மிகவும் துன்பகரமான காலத்தில் இருந்திருக்கின்றோம். இந்த நாட்டிலே நாங்கள் பிறந்தது அதிஸ்டமாக இருந்தபோதும் கடந்த 40 வருடமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்த நாட்டில் நாங்கள் பிறந்தது துர்திஸ்டவசமானது என நினைத்தோம்.
கடந்த காலங்களில் நாங்கள் கிராமங்களை அழித்தோம் குண்டு வைத்தோம், எரித்தோம் , வன்முறையில் ஈடுபட்டோம் அப்படியான ஒரு நாட்டில்தான் இவ்வளவு காலமாக வாழ்ந்து வருகின்றோம்.
இந்த நாட்டில் பௌத்த, இந்து, கிறிஸ்த, முஸ்லீம் சமயம் ஆகிய 4 சமயங்களைச் சேர்ந்த மக்கள் அன்பாக ஒன்றிணைந்து வாழவேண்டும் என எல்லா மதங்களும் போதித்துள்ளது.
அதேவேளை வெவ்வேறு மொழிகள் வெவ்வேறு கலாச்சாரம் கொண்டதாக இருந்தபோதும் இனங்களை பிரிப்பதற்காக அல்ல அவர்களை ஒன்றிணைப்பதற்கு செயற்பட்டோம் .
ஒற்றுமையாக வாழவேண்டும் என இருந்தபோதும் கடந்த காலங்களில் இந்த அரசியல்வாதிகள் செய்த பெரும் தவறு தேர்தல் காலங்களிலே மக்களை பிரித்து அவர்களை நாசமாக்கி அரசியல் செய்தார்கள் இது தான் இந்த நாட்டில் சமாதானம் இல்லாம் போய்விட்டது
ஜனநாயகம் என்பது நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை தான் குறிப்பிடுகின்றது இருந்தபோதும் ஜனநாயத்துக்கு எதிராக சில அரசியல் தலைவர்கள் செயற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நாட்டிலே பிறந்த தமிழ் முஸ்லீம், சிங்களவர், பறங்கியர் யாராவது வெளிநாடுகளுக்கு சென்றால் அங்கு இரண்டாவது பிரஜைகளாகதான் கணிக்கின்றனர்.
நாட்டில் எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்கால சந்ததியாவது நிம்மதியாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
அதனை அரசாங்கத்தால் மாத்திரம் செய்யமுடியாது எல்லோரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே இலகுவாக முன்னெடுத்துச் செல்லமுடியும்.
மக்களுக்கு நன்றாக தெரியும் யார் யார் போதை பொருள் மற்றும் சட்டவிரோத மதுபாவனை வியாபாரிகள் பாவிப்பவர்கள் என அனைத்தும் தெரியும் ஆனால் அவர்களை காட்டி கொடுப்பதற்கு அவர்களுக்கு சக்தியில்லை எனவே கிராமிய மட்டத்தில் ஒற்றுமையாக இருப்போம் .
மக்களுக்கு அரசியல் அறிவு இல்லாத காரணத்தால் அந்த பிழையான அரசியல்வாதிகளை தெரிவு செய்கின்றோம் எனவே மக்களுக்கு அரசியலை போதிப்பதால் அவர்கள் சரியானவர்களை தெரிவு செய்வார்கள் .” என தெரிவித்தார்.