சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்ட குடும்பத்தினர் கைது: பல மில்லியன் ரூபா வாங்கிய தரகர், 20 பேருக்கு வழங்கப்பட்ட போலி விசா

OruvanOruvan

போலியான கிரேக்க வீசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு செல்ல வந்த வர்த்தக குடும்பம் ஒன்று நேற்று (24) விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குடும்பம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாவை தரகர் ஒருவரிடம் செலுத்தி போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் குடும்பமே கைது செய்யப்பட்டுள்ளார். 47, 43, 21 மற்றும் 16 வயதுடைய குடும்ப உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதால், அந்த நாடுகளுக்கான விசா வழங்குவது "குளோபல் விசா வசதி சேவை" மூலம் செய்யப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள நபரை இந்தியாவில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற தரகர், வாக்குறுதி அளித்த தொகையை பெற்றுக்கொண்டு இந்த போலி விசாக்களை வழங்கியது தெரியவந்துள்ளது.

இந்த குடும்பம் நேற்று (24ஆம் திகதி) மாலை 05.00 மணியளவில் கல்ஃப் ஏர்லைன்ஸ் GF-145 விமானத்தில் பஹ்ரைன் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

முதலில் பஹ்ரைன் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

தனக்கு இந்த கிரேக்க விசாக்களை ஏற்பாடு செய்த தரகரும் இவ்வாறு பணம் பெற்று 20 பேருக்கு விசா வழங்கியதாக கைது செய்யப்பட்ட வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.