இஸ்ரேலிய குடியேற்றங்கள் - சட்ட விளக்கம் கோரும் ஐ.நா: சர்வதேச சட்டங்களை ஆராயாமல் கட்சி மோதல்களில் ஈடுபடும் தமிழ்த் தரப்பு

OruvanOruvan

இஸ்ரேல் - பலஸ்தீன பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதன் சட்டபூர்வத் தன்மை பற்றி ஆராய்ந்து சட்டப் பொருள் கோடல்களைப் பரிந்துரைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிய சட்ட விளக்கம் பற்றிய விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.

சென்ற செய்வாய்க்கிழமை அமெரிக்காவும் ரஷ்யாவும் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தன.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் பற்றி விளக்கம் கோரும் இந்த விவாதாத்திற்குச் சுமார் நாற்பதுக்கும் அதிகமாக நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்றன.

அமெரிக்கா உட்பட பத்து நாடுகள் மாத்திரமே இஸ்ரேலுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் கருத்திடுகின்றன.

சென்ற திங்கட்கிழமை ஆரம்பித்த இந்த விவாதம் நாளை 26 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளது.

பதினைந்து நீதிபதிகள் கொண்ட குழு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, மக்கள் தொகை அமைப்பு, ஜெருசலேம் புனித நகரத்தின் தன்மை, பலஸ்தீன மரபுவழி பிரதேசங்களில் குடியேற்றும் செய்யும் இஸ்ரேலின் அடிப்படை நோக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரபட்சமான சட்டம் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய சட்டப் பொருள் விளக்கங்களை ஆராய்கின்றனர்.

ஆறு மாதங்களில் நீதிபதிகளின் பதில்

இது தொடர்பாக ஐ.நா.வுக்கு நீதிபதிகள் பதிலளிக்க சுமார் ஆறு மாதங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

ஐ.நா பொதுச் சபையின் இந்த பொருள்கோடல் தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கா இது அரசியல் விவகாரம் என்றும் ஆகவே ஆக்கிரமிப்பு பற்றிய சட்ட விளக்கம் கோர இயலாது என்றும் வியாக்கியாணம் செய்துள்ளது.

குறிப்பாகப் பேச்சுவார்த்தைகள் மூலம் இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரத்துக்குத் தீர்வு காண முடியும் என்ற கருத்தை அமெரிக்கா வெளிப்படுத்தியிருக்கிறது.

அத்துடன் ஐ.நா.சட்ட விளக்கம் கோருவதற்கு இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாகுவும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

ஐ.நாவின் கோரிக்கையின் பிரகாரம் சர்வதேச நீதிமன்றத்திடம் கோரப்டபட்டுள்ள சட்ட விளக்கத்துக்கு ஒத்துழைக்க முடியாது என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தொடர்பாக விளக்கம் கோரப்பட்டால் சர்வதேச நியமங்களின் பிரகாரம் பின்வரும் மூன்று விடயங்கள் வெளிப்படும்.

ஒன்று - பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை, இரண்டாவது - சட்டவிரோத ஆகிரமிப்புக்கு எதிராகச் செயற்படுதல், மூன்றாவது - திட்டமிடப்பட்டுப் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் அந்தப் பிரதேங்களில் குடியமர்த்த அனுமதித்தல்.

ஆகவே இந்த மூன்று விடயங்களுக்குமான சட்டரீதியான பொருள் விளக்கங்களைச் சர்வதேச நீதிமன்றம் வழங்குமானால், பலஸ்தீனப் பிரதேசத்தில் 1967 இல் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், அந்தப் பிரதேசங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டிய கட்டயாம் ஏற்படும்.

ஆகவே இது பலஸ்தீனம் தமது பிரதேசம் என்ற இஸ்ரேலின் கொள்கைக்குப் பெரும் ஆபத்தாக அமையும். அதன் காரணமாகவே இது அரசியல் விவகாரம் எனவும் பேச்சுவார்த்தைகளின் ஊடாகவே தீர்வு காண முடியும் என்ற கருத்தையும் அமெரிக்கா முன்வைக்கிறது என்பது வெளிப்படை.

மீளவும் ஒப்படைக்க வேண்டும்

சட்டரீதியான பொருள்கோடல் வெளிவந்தால் 1967 இல் இருந்து கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களை மீளவும் ஒப்படைக்க வேண்டிய ஆபத்து நேரலாம் என்பதாலேயே இஸ்ரேலியப் பிரதமரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்திருக்கிறார் என்பது பகிரங்கமாகிறது.

இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரத்துக்கு 'இரு அரசு' என்பதுதான் தீர்வு என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என அமொிக்கா அழுத்தம் கொடுப்பதற்கு, சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா சட்ட விளக்கம் கோரியமையே பிரதான காணமாகும்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்றால் இஸ்ரேல் 1967 இல் இருந்து கைப்பற்றிய பலஸ்தீன பகுதிகளை மீளவும் ஒப்படைக்காமல் தற்போது பலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகக் குறைந்தளவிலான பிரதேசங்களுடன் மாத்திரம் தனி அரசாக அங்கீகரித்து விடலாம் என்றும் அமெரிக்கா கருதக்கூடும்.

ஆனாலும் அமெரிக்கா அவ்வாறு கருதுவதைக் கூட இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கிறது. ஏனெனில் இரு அரசு தீர்வு என்பதை ஏற்க இஸ்ரேல் மறுக்கிறது.

அதாவது பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க இஸ்ரேல் ஒருபோதும் விரும்பாது. இப் பின்னணியில்தான் சர்வதேச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டப் பொருள்கோடல் தொடர்பான விவாதம் இஸ்ரேலுக்குப் பெரும் தலையிடடியைக் கொடுத்திருக்கிறது.

காசாவில் நடப்பது இனஅழிப்பு என்று கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்கா சமர்பித்திருந்த மனுவை விசாரணை செய்த சர்வதேச நீமன்றம் ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி ஐ.நா.பொதுச் சபை 52 நாடுகளுடன் இஸ்ரேலின் பலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்புப் பற்றிய சட்டப் பொருள்கோடலை கோரிய விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இது உலக அரசியல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பலஸ்தீன விவகாரம் இவ்வாறு இருக்கும் நிலையில் உலக அரசியல் நடைமுறைகளையும் சர்வதேச் சட்ட நுட்பங்களையும் ஆராய்து ஈழத்தமிழர் விவகாரத்தில் சர்வதேச ரீதியாக நகர்த்தக் கூடிய அணுகுமுறைகளைக் கையாளாமல், வெறுமனே பதவிப் போட்டிகளும் கட்சியின் யாப்புச் சரியா பிழையா என்று இலங்கை ஒற்றையாட்சி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது போன்ற தேவையற்ற விடயங்களில் தமிழ் தரப்புக் கவனம் செலுத்தி வருகின்றமை ஆரோக்கியமானதல்ல.

கல்லோயா குடியேற்றம்

பலஸ்தீன பிரதேசங்களில் 1967 இல் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் பற்றிய சட்டத்தன்மைகளை ஆராய்ந்து சட்ட விளக்கம் தருமாறு சர்வதேச நீதிமன்றத்திடம் ஐ.நா கோரியது போன்று, இலங்கை ஒற்றையாட்சி அரசும் 1941 இல் கிழக்கு மாகாணம் கல்லோயாவில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் இன்று வரை மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புப் பற்றிய சட்ட விளக்கங்களை கோரினால், நிச்சியமாக அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வெளியேற வேண்டிய நிலைமை உருவாகும்.

ஆனால் ஐ.நா.பொதுச் சபையின் ஆதரவுடன் சர்வதேச நீதிமன்றத்திடம் அவ்வாறான சட்ட விளக்கம் கோரக்கூடிய அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு இல்லை. பலமும் இல்லை.

அதற்கான சூழல் உருவாக்கப்படவுமில்லை

ஏனெனில் 2009 இற்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா - இந்திய அரசுகளின் செல்லப் பிள்ளைகளாக தமிழ்த்தேசியக் கட்சிகள் மாறியிருப்பதே அந்த ஆதரவு இன்மைக்கான பிரதான காரண – காரியம்.

1970 களில் இருந்து தமிழர் அரசியல் சூழலில் தமிழ்ச் சட்டத்தரணிகள் தங்களுக்குரிய சொந்த நலன்கள் மற்றும் தமிழ் இன அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட நிலையியிலேயே ஈழத்தமிழ் அரசியல் விவகாரங்களையும் கையாண்டிருந்திருக்கின்றனர்.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தில் இருந்து இன்றுவரை தமிழ்ச் சட்டத்தரணிகள் பலரின் செயற்பாடுகள் இவ்வாறானதாகவே அமைந்திருக்கின்றன.

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஈழத்தமிழர்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய சர்வதேசச் சட்ட நுட்பங்களை அறிந்துகொள்ள முற்படுவதில்லை.

மாறாகச் சர்வதேச நீதி கோரி ஆர்ப்பாட்டங்களையும் பேராணிகளையும் நடத்துகின்றனர். ஆனால் சர்வதேச நீதிக்கு ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் போதுமானதல்ல. சா்வதேச சட்ட நுட்பங்களை ஆராய்வதே அவசியமானது.

காசாவில் நடப்பது இனஅழிப்பு என்று தென்னாபிரிகா சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குத் தாக்குதல் செய்துள்ளது. மியன்மாரில் ரோகின்ய முஸ்லிம்கள் இனஅழிப்புக்கு உள்ளாகின்றனர் என்று காம்பிய என்ற ஒரு சிறிய நாடுதான் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

ஆனால் இது போன்ற அணுகுமுறைகள் எதுவும் தமிழ்த்தரப்பிடம் இல்லை. ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாகப் பேசப்படுகின்ற விடயங்களை ஐக்கிய நாடுகள் சபைக்குப் பாரப்படுத்த வேண்டிய சட்டப் பொறிமுறை தொடர்பான விளங்கங்கள் அல்லது அது பற்றி அறிக்கூடிய முறைமைகள் குறித்து ஆராய வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. இதுவரை ஆராயப்படவுமில்லை.

இப்படியான ஒரு பின்னணியில்தான் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் செயற்படும் தமிழ்த்தேசியக் கட்சிகள் வெறுமனே தேர்தல் வியூகங்களை மாத்திரம் வகுத்துக் கொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றக் கதிரைகள்

தத்தமது கட்சிகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தமக்குரிய நாடாளுமன்ற கதிரைகளைத் தக்க வைக்கும் உத்திகள் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தத்தமது கட்சிகளின் ஆசனங்களை அதிகரித்தல் என்று பேரம் பேசுதல்களுடன் ஈழத்தமிழர் அரசியல் சுருங்கிவிட்டது.

ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு சர்வதேச அரங்கில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்து அதனை இலங்கைத்தீவின் உள்ளக விவகாரமாக மாற்றக்கூடிய அத்தனை நகர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வில் இலங்கை தொடர்பான விடயம் ஆராயப்படவுள்ளது.

அதனை முறியடிக்க ஏறத்தாள நாற்பத்தியாறு பக்கங்களில் நல்லிணக்கப் பொறிமுறைச் செயற்பாடுகள் குறிப்பாக தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் செயற்பாடுகள் பற்றிய இரண்டு அறிக்கைகள் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சென்ற டிசம்பர் மாதமும் சென்ற ஜனவரி மாதமும் இரு அறிக்கைகளும் தனித் தனியாக அனுப்பப்பட்டிருக்கின்றன.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான பதினைந்து உயர் அதிகாரிகள் கொண்ட குழு அடுத்தவாரம் ஜெனிவாவுக்குப் பயணம் செய்து நேரடியாகவும் விளக்கமளிக்கவுள்ளது.

ஆனால் இலங்கை அரசின் இந்த இரு அறிக்கைகளும் உண்மைத் தன்மையற்றது என்று விளக்கமளித்துத் தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வரும் பௌத்த மயமாக்கல் பற்றிய ஆவணங்கள் எதுவும் தமிழ்த்தரபபினால் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டதாக் தெரியவில்லை.

மாறாக பிரித்தானியாவில் இருந்து ஜெனிவாவுக்குப் பதினாறு நாள் தொடர் பேரணி மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

பிரதம ஆசிரியர்