கொழும்பில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் மோசடி: சோதனைக்கு தயாராகும் பொலிஸார்

OruvanOruvan

Drugs

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கி அங்கிருந்து பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த கடத்தல்காரர்கள் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை மாத வாடகை அடிப்படையில் அதிக விலைக்கு பெற்று அவற்றை பயன்படுத்தி பாதுகாப்பாக போதைப்பொருள் கடத்தலை நடத்துவதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் வெவ்வேறு நபர்களின் பெயர்களில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்துள்ளதாகவும், கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கி, அந்த வீடுகளை பொலிஸ் அதிகாரிகள் சோதனை செய்யாததால், அவற்றை தங்களது பாதுகாப்பான வீடுகளாக பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை, பொரலஸ்கமுவ, இராஜகிரிய போன்ற இடங்களில் அமைந்துள்ள சொகுசு குடியிருப்புகளை கொள்வனவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எதிர்காலத்தில் இந்த சொகுசு அடுக்கமாடி வீடுகளை ஆய்வு செய்ய பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பணியாற்றி வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பெரும் செல்வத்தில் இருந்து சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி அதைத் தங்கள் சொத்தாக வைத்துக் கொள்ளும் வேலையையும் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.