5 ஆயிரத்துக்கு பதிலாக 35 ஆயிரம் ரூபா விலைப்பட்டியல்: தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் சுற்றுலாப் பயணிகள்

OruvanOruvan

foreign tourist

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு பகுதியாக சுற்றுலாத் துறையும் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த வகையில் சுற்றலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், சில சலுகைகளையும் வழங்கி வருகின்றது.

இருந்த போதிலும், இலங்கையை நம்பி வரும் சுற்றுலா பயணிகள் ஓர் சில நயவஞ்சகர்களினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் சம்பவங்களும் அங்காங்கே துரதிர்ஷ்டவசமாக பதிவாகி வருகின்றது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட இது போன்றதொரு மோசடி காணொளி குறித்து தற்சமயம் சர்ச்சை எழுந்துள்ளது.

5 ஆயிரத்துக்கு பதிலாக 35 ஆயிரம் ரூபா

பொலன்னறுவையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பெற்றுக் கொள்ள வெளிநாட்டு பெண் ஒருவர் சுற்றுலா வழிக்காட்டியுடன் சென்றுள்ளார்.

5000 ரூபாவுக்கு உணவு உட்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பிரஜைக்கு போலியான விலை பட்டியல் கொடுத்து 35000 ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு உணவக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உணவகத்தில் அச்சுறுத்தி பணம் பறிப்பதை சுற்றுலா வழிக்காட்டி கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில் குறித்த ஊழியர் சுற்றுலா வழிகாட்டியை தாக்க முயற்படுவதையும், மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்வதும் வெளிப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் சுற்றுலாப் பயணிகள்

இது மாத்திரமல்லாது, சில முச்சக்கர வண்டி சாரதிகள், பஸ் நடத்துனர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்டோரினாலும் சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் சந்தர்ப்பங்களும் நாட்டில் அதிகரித்துள்ளது.

எனவே, இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழி அமைக்கும் பிரதான துறைகளுள் ஒன்றாக காணப்படும் சுற்றுலா துறையில் இடம்பெறும் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு அரசாங்கம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.