கொழும்பு அரசியலில் அமெரிக்கா கரிசனை: சிங்களத் தலைவர்களுடன் உரையாடும் இராஜதந்திரி

OruvanOruvan

Senior US Official Discusses Sri Lanka's

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார மீட்டெடுப்புக்கு பாராட்டை தெரிவித்துள்ள அமெரிக்கா, தீவில் தற்போது மேற்கொள்ளப்படும் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளின் முன்னேற்றத்துக்கு தனது ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலமாக இலங்கைத் தீவில் அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் கவனம் செலுத்தி வரும் அமெரிக்கா, ஜனாதிபதி தேர்தல் விடயத்திலும் மறைமுக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தது.

இந்த நிலையில் கொழும்புக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜதந்திர ஒருவர் சிங்கள அரசியல் தலைவர்களுடன் பிரதான உரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

சிங்களத் தலைவர்களுடன் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா (Richard Verma) நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அதன் சர்வதேச நாணய நிதிய (IMF) வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு

தெற்காசிய தீவு நாடு 2023 மார்ச்சில் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பை இறுதி செய்தது.

இது பணவீக்கத்தை குறைக்க உதவியது, அரச வருவாயை அதிகரித்தது மற்றும் அந்நிய செலாவணி இருப்புக்களை உயர்த்தியது.

1948 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர், மிக மோசமான நிதி நெருக்கடியைத் தூண்டிய அந்நியச் செலாவணி கையிருப்பின் கடுமையான பற்றாக்குறைக்கு பின்னர் இலங்கை 2022 மே மாதம் அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.

இலங்கை இருதரப்பு கடன் மறுசீரமைப்பில் சுமார் 11 பில்லியன் டொலர்கள் முன்னேற்றம் கண்டுள்ளது மற்றும் பத்திரப்பதிவுதாரர்கள் உட்பட அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களுடனும் மே மாதத்திற்குள் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புகிறது என்று அலி சப்ரி இந்த மாத தொடக்கத்தில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்ட முக்கிய விடயங்கள்

இராஜாங்க திணைக்கள அதிகாரி மற்றும் இலங்கைத் தலைவர்களுடனான இந்த சந்திப்பில், இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன், உலக பாதுகாப்பு தொடர்பான விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

OruvanOruvan

Senior US Official Discusses Sri Lanka's

இலங்கை பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை

இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.8% சுருங்கியது என உலக வங்கி கணித்துள்ளது, எனினும் 2024 இல் பொருளாதாரம் 1.7% வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் மத்திய வங்கி இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 3 வீதம் வளர்ச்சியடையும் என அதிக நம்பிக்கையில் உள்ளது.