ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க நகர்வா?

OruvanOruvan

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கப்பாடு எட்டுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச, பிரதமர் பதவியை பெற வேண்டுமெனவும் இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சஜித்துடன் முறுகும் கட்சியின் முக்கியஸ்தர்கள்

சஜித் இந்த விடயத்தில் விரைவான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்க நேரிடும் என்றும் இவர்கள் எச்சரித்துள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆளுங்கட்சி தலைமையிலான கூட்டணியை அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் இடம்பெற்று வரும் பின்புலத்தில் அதற்கு முன்னர் இந்த உடன்பாடுகள் எட்டப்பட வேண்டுமெனவும் சஜித்திடம் கோரியுள்ளனர்.

ஆனால், சஜித் பிரேமதாச, இவர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாகவும் அவ்வாறான உடன்பாடுகளை எட்ட முடியாதென கூறியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்தியா ஜே.வி.பியை அழைத்தது எதற்கு?

ரணிலும் சஜித்தும் இணைந்தால் தங்களுக்கு சாதகமான பலமான அரசாங்கமொன்றை இலங்கைத் தீவில் அமைக்க முடியும் என்றும் சீனாவின் ஆதிக்கத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் அமெரிக்கா கருதிவரும் பின்னணியில் இந்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோ-பசுபிக் விவகாரத்தில் சீன செல்வாக்கை தடுப்பதற்கான அமெரிக்க நகர்வுகளுக்கு இந்தியா ஒத்துழைப்பதாக இல்லை.

இந்தியா சீனாவுடன் முடிந்த வரையில் முரண்பாட்டில் உடன்பாடாக அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள விரும்புகிறது.

இப்பின்புலத்திலேயே புதுடில்லி ஜே.வி.பி அழைத்து பேசியதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இதன் காரணமாக பிரதான அரசியல் தலைவர்களாக இருக்கும் ரணில் - சஜித் ஆகிய இருவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுவருவதாகவும் கொழும்பு உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.