இந்தியத் தமிழரா, மலையகத் தமிழரா?: பிளவுபடுத்த முடியாது - மனோ

OruvanOruvan

Mano Ganesan - Member of the Parliament of Sri Lanka Photo credit - Getty Image

"இந்தியத் தமிழரா, மலையகத் தமிழரா” என்ற விவாதத்தை இப்போது ஒத்திவைத்து விட்டு, இம்முறை சனத்தொகை கணக்கெடுப்புக்கு இந்தியத் தமிழர் அல்லது மலையகத் தமிழர் என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என எண்ணுகின்றேன்.”

- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சனத்தொகை கணக்கெடுப்பின் போது, காலம் ஒரு அடையாளத்தை காட்டும்.

'தமிழர்' என்ற பொது தமிழ் இன அடையாளமாக இருக்கலாம். அல்லது இன அடையாளங்களே மறைந்து “இலங்கையர்” என்ற பொது நாட்டு அடையாளமாகவும் இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டபூர்வமான அடையாளத்தை ஏற்றுக்கொண்டுள்ளோம்

குடிசனக் கணக்கெடுப்பில் மலையகத் தமிழ் அடையாளத்துக்கான கூட்டிணைவு அமைப்பினர், மனோ கணேசனைச் சந்தித்து தமது கோரிக்கை ஆவணங்களை வழங்கி உரையாடினர். இதன்போது மனோகணேசன் மேலும் கூறியதாவது,

"இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் மற்றும் அனைத்து தமிழ் பேசும் மக்கள், இலங்கை மக்கள் மத்தியிலும் பிளவுகளை ஏற்படுத்த முடியாது.

இது இலங்கை நாட்டவர் என்ற அடையாளத்திற்கு உள்ளே வரும் ஒரு சட்டபூர்வமான உள்ளக அடையாளம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

ஜனாதிபதிக்கு அழைத்தேன்

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களம் இது தொடர்பில் எடுத்துள்ள முற்போக்கு நிலைபாட்டை கணக்கில் எடுத்து, உத்தேச கணக்கெடுப்பு ஆவணங்களில் உரிய அடையாளம் இடம்பெறுவதற்கான உரிய அறிவுறுத்தல்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து கிடைக்கப்பட்ட வேண்டும் என என்னுடன் தொலைபேசியில் உரையாடிய தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், எமது கலந்துரையாடலின்போது, ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமது நிலைபாட்டைத் தெரிவித்திருந்தேன்.

இதற்கு அவசியமான அறிவுறுத்தல்களை, தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்துக்கு வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.

இதை ஒருங்கிணைத்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயகவிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினேன்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.