இலங்கையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்: அதியுச்ச இலக்கை எட்ட நடவடிக்கை

OruvanOruvan

Tourism

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 138,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் 107,639 பயணிகள் மாத்திரமே நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

இவ்வாறான அதிகரிப்பு தொடருமாயின் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதத்திலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐ எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 7,707 ஆக அதிகரித்துள்ளதுடன் வாராந்த எண்ணிக்கை 53, 000 ஆக அதிகரித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தின் முதல் முதல் இரண்டு வாரங்களில் விமானத்தினூடாக பயணம் செய்வதர்களை விடவும் கடல் மாரக்கத்தினூடாகவே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அந்த வகையில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ரஷ்யா 14 வீதத்தினைக் கொண்டுள்ளதுடன் இந்தியா 13 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் தொழிற்துறை தரவுகளின்படி, கிடைக்கப்பெறும் வருமானம் மதிப்பிடபட்டளவில் கிடைக்கவில்லையென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த மாதத்திற்கான இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 சதவீதத்துடன் ஐக்கிய இராச்சியம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடற் பயணத்தை மேம்படுத்த அமைச்சரவை நேற்று (20) அனுமதி வழங்கியுள்ள நிலையில் மேலும் கடல் மார்க்கத்திலான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்துயிர் பெறும் சுற்றுலாத் துறை

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நோக்கம் ஓய்வை மையப்படுத்தி அமைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்திருந்தார்.

எனினும் விதிக்கப்பட்டுள்ள 18 வீத வரி அதிகரிப்பு சுற்றுலாத்துறையிலும் தாக்கம் செலுத்துகின்றது.

அண்மையில் சுற்றுலாத் தளங்களுக்ககான பயணச்சீட்டு அதிகரிப்பினால் சுற்றுலாப் பயணிகள் தமது கவலைகளை வெளியிட்டனர்.

எவ்வாறாயிகும் தற்போது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரி காரணமாக, சுற்றுலாத் தளங்களுக்ககான பயணச்சீட்டு அதிகரித்திருக்கின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் 7,489,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தமை அதன் இருமடங்கு அதிகரிப்பை காட்டுகின்றது.

கொவிட்19, ஈஸ்டர் குண்டு தாக்குதல், மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது.

அரசாங்கத்தின் திட்டம்

அரசாங்கத்தின் புதிய திட்டமிடல்களின் பலனாக தற்போது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2017 ஆண்டு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்த நிலையில் அந்த இலக்கையும் கடந்து செல்லும் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய திட்டமிடலை அரசாங்கம் கொண்டுள்ளது.

அதேபோல் நாளாந்தம் 500 டொலர்களைச் செலவிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாறாக, அதனை விடவும் அதிக தொகையைச் செலவிடக்கூடிய உயர்மட்ட சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சுற்றுலாத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.