வெளிநாட்டு பயணிகளிடம் கைவரிசையை காட்டும் திருடர்கள்: நுவரெலியாவில் அதிகரிக்கும் திருட்டு மாபியா

OruvanOruvan

அண்மை காலமாக நுவரெலியா நகரில் வாகனங்களில் வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவிற்கு நாள்தோறும் பொதுமக்கள் உட்பட ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அப்படி வருபவர்கள் நுவரெலியா மாநகர சபையினால் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.

அவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு திரும்பி வரும் போது மோட்டார் சைக்கிளுக்கு பயன்படுத்தும் தலைக்கவசம் , பக்கவாட்டு கண்ணாடி, வாகனங்களில் வைக்கப்படும் விலையுயர்ந்த பொருட்கள், பயணப்பை உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர் இதுகுறித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, வேன்கள் போன்றவற்றிலே போலி வாகன சாவிகளை பயன்படுத்தி அதிகம் களவாடப்படுகின்றமை தொடர்பில் அதிகளவு முறைப்பாடு பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் அதிகமாக நுவரெலியா நீதிவான் நீதிமன்றுக்கு முன்பாகவும் , பிரதான நகரில் உள்ள மணி கோபுரத்திற்கு முன்பாகவும் , நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும் உள்ள வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களிலே பொருட்களும், வாகன உதிரிபாகங்களும் அதிகம் களவாடப்படுவதால் வாகன உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேவேளை, கடந்த வியாழக்கிழமை (15) திகதி நுவரெலியா நீதிமன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளின் இருக்கையை உடைத்து அதனுள் இருந்த இரண்டு விலையுயர்ந்த கையடக்கதொலைபேசிகளும் ஒரு தொகை பணம் திருடப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நுவரெலியா மாநகர சபை ஊடாக பணம் அறவிடப்படுகின்ற போதிலும் உரிய பாதுகாப்பு இல்லை என குற்றம் சுமத்துகின்றனர். அது தொடர்பில் பொலிஸாரும் அசமந்தமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றன.