அனுரவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சட்ட சிக்கல்: தேசிய மக்கள் சக்தியின் பதிவு சட்டவிரோதமானதா?அழைப்பாணை

OruvanOruvan

Anura

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி, வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதி மன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் 04 ஆம் திகதி இந்த மனு மீதான விசாரணையை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரேத்தி பத்மன் சூரசேன, அச்சல வென்னப்பு மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த பிரேரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு நீதிமன்றில் சான்றுகளை முன்வைத்ததுடன் பிரேரணையை பரிசீலிப்பதற்கு திகதியொன்றை நிர்ணயிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கோரிக்கைகளை ஏற்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தொடர்புடைய மனுவை பரிசீலிப்பதற்கு திகதி நிர்ணயித்தது.

வினிவிந்த பெரமுனவினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு மறுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் நாகாநந்த கொடிதுவுக்கு இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஓர் பகுதியான தேசிய மக்கள் சக்தி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு முரணானது என

நாகாநந்த கொடிதுவாக்கு பிரேரணையின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 103(2) பிரிவின்படி, ஒரே கட்சியின் வெவ்வேறு பிரிவுகளை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்வது தேர்தல் சட்டங்களுக்கு முரணானது என்பதுடன்

அதன் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ள உரிமையை மீறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என அறிவிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பிரேரணையினூடாக

நாகாநந்த கொடிதுவுக்கு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.