நல்லிணக்கம் கொழும்பிலிருந்து எழ வேண்டும்?: காயங்களை ஆற்றுப்படுத்த விரும்பாத தென்னிலங்கை

OruvanOruvan

The Eelam struggle remained armed for about 15 years

ரஷ்ய - உக்ரைன் போர், இஸ்ரேல் - பலஸ்தீனம் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னரான சூழலில் குழப்பமடைந்திருக்கும் உலக அரசியல் ஒழுங்கு இலங்கைத் தீவில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

புவிசார் அரசியல் நலன் நோக்கில் செயற்படும் அமெரிக்க - இந்திய அரசுகள் இலங்கைத்தீவின் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிட்டுவரும் நிலையில் ஈழத்தமிழர் விவகாரம் புறமொதுக்கப்பட்டுள்ளது.

2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் இலங்கைத் தீவில் நல்லிணக்கம் பேசும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்த நல்லிணக்கத்தை ஈழத்தமிழர்களிடம் திணிக்கின்றது.

ஆனால், நல்லிணக்கம் கொழும்பில் இருந்துதான் வரவேண்டும். அதாவது சிங்கள அரசியல் தலைவர்களிடம் இருந்துதான் எழ வேண்டும். ஏனெனில் அதிகார மையம் அங்குதான் உண்டு.

13ஆவது திருத்தச்சட்டம்

13ஆவது திருத்தச்சட்டம் நல்லிணக்கத்தின் பிரதான பொறி. ஆனால், அதனைக்கூட நடைமுறைப்படுத்த முடியாத சிங்கள அரசியல் தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து ஈழத்தமிழர் விவகாரத்தை உள்ளக விவகாரமாக மாற்றி வருகின்றனர்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஐக்கியம் தொடர்பில் பேசிக் கொண்டு காலத்தை கடத்தும் வேலைத்திட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

போர்குற்றம், மனித உரிமை மீறல்கள், காணாமல் போனோர் விவகாரம், சொத்தழிவு என பல்வேறு பிரச்சினைகளுக்கு இதுவரை எந்த தீர்வும் இல்லை.

2009ஆம் ஆண்டிற்கு பின் மாறிமாறி ஆட்சிக்கு வரும் எந்தவொரு ஆட்சியாளர்களிடமும் அதுபற்றிய சிந்தனைகள் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஆனாலும், தமிழ் மக்கள் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என தென்னிலங்கை ஆட்சியாளர்கள் போதிக்கின்றனர்.

மனதில் காயங்களையும் உடலில் வலிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் காயங்களை ஆற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் எவ்வாறு இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் சர்வதேசத்தையும், தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் திசைதிருப்பும் கைங்கரியமாக ஆணைக்குழுக்களை அமைப்பதும், பின்னர் அதன் முடிவுகளை கிடப்பில் போடுவதும் கடந்த கால வரலாறுகள்.

எந்தவொரு ஆட்சியாளர்களும் இதயசுத்தியுடன் தமிழர் விவகாரத்தை கையாளவில்லை என்பதே கடந்த கால துன்பியல் வரலாறு.

இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் உருவாக்க வேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட தரப்பு ஏற்றுக்கொள்ளும் வகையில் நீதி வழங்க வேண்டும்.

மாறாக அதனை அரசியலாக்கி மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் குரோதங்களையும் பிரிவினையையும் ஏற்படுத்தவே சிங்கள கடும்போக்குவாத ஆட்சியாளர்கள் செயற்பட்டுவருகின்றனர்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை

தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையாக காண்பித்து, இலங்கை பிளவுபடப் போவதாக பிரச்சாரம் மேற்கொண்டு சிங்கள மக்களுக்கும் பௌத்த மதத்திற்கும் பாதுகாப்பு இல்லை என்று போலியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

இப்பிரசாரங்கள் ஊடாக தமது அரசியலை தக்கவைத்துக் கொள்கின்றனர். இதுவே 1948ஆம் ஆண்டிலிருந்து தொடரும் இலங்கையின் அரசியல் கலாசாரமாகும்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு

இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் ஏற்பாடுகளும் மேலும் இனவிரிசலை துரிதப்படுத்தியிருந்தது.

அத்தகைய அரசியல் அமைப்புக்களில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்ற வாதம் தமிழ்த் தரப்பில் இருந்த போதிலும் சிங்கள ஆட்சியாளர்கள் அதனை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.

இத்தகைய பின்னணியில் இலங்கையில் எத்தினை ஆணைக்குழுக்கள் அமைத்தாலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தென்னிலங்கை அரசியல்வாதிகளும், தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரே மேசையில் அமர்ந்திருந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சினை விவகாரத்துக்கு தீர்வை காண்பதுதான் பொருத்தமானது.

மதங்கள், கலாச்சாரம், மொழி என்பன தொடர்பில் விட்டுக்கொடுப்புடன் பேச்சு நடத்தி அதற்கு ஏற்ப விதிமுறைகளை அமைப்பதும், இலங்கைத் தீவின் சகல மக்களுக்கும் சாதகமாக அமையும் விதத்தில் அரசியலமைப்பை உருவாக்குவதன் ஊடாக உறுதியான இனநல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்.