இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியா?: தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஹரின்

OruvanOruvan

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி (srilanka part of india) என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கடந்தவாரம் மும்பாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கருத்துக்கு ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்களும் கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

ஆளுங்கட்சி உறுப்பினர் கடும் எதிர்ப்பு

இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கைகளுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டதுடன், எட்கா (Economic and Technology Cooperation Agreement) உடன்படிக்கையால் இலங்கையர்களின் தொழில்வாய்ப்புகள் பறிபோகும் என அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றிய விமல் வீரவசங்க, ஹரின் பெர்ணான்டோ ரணிலின் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கிறார்.

இலங்கையை இந்தியாவின் 29ஆவது மாநிலமாக மாற்றுவதற்கான சதித்திட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் அதன் வெளிப்பாடே ஹரினின் கருத்து எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

வரலாற்று காலம் தொட்டு இந்தியாவுடன் உறவு

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஹரின் பெர்ணான்டோவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தப் பின்னணியில் இன்று சபையில் உரையாற்றிய ஹரின் பெர்ணான்டோ, எனது கருத்தை திரிபுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் இத்தகைய போலி செய்திகளை பரப்பி வருகின்றனர்.

பௌத்த மதம் இந்தியாவில் இருந்துதான் வந்தது. விஜயன் இந்தியாவில் இருந்துதான் வந்தார். வர்த்தகம், கலாசாரம், பண்பாட்டு ரீதியாக வரலாற்று காலம் தொட்டு எமது உறவுகள் தொடர்கிறது.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாதான் எமக்கு உதவிகளை வழங்கியது. மருந்துகளையும், உணவுகளையும் வழங்கியது. அவற்றை கொடுக்கும் போது அவர்கள் நல்லவர்கள். முதலீட்டுக்கான அழைப்பை விடுக்கும் போது அவர்கள் கெட்டவர்களா?.

srilanka part of india என்ற கருத்தை முன்வைத்தது இத்தகைய வரலாற்று பின்னணியை விலக்கமளித்து முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் சந்தர்ப்பத்தில்தான். அதன்மூலம் இலங்கை இந்தியாக்கு உரித்துடைய ஒரு பகுதி எனக் கூறவில்லை. போலி செய்திகளை பரப்ப வேண்டுடாம்.” என்றார்.