அமெரிக்காவின் எதிரியை இலங்கை வருமாறு அழைப்பு: இராஜதந்திர நெருக்கடியை எதிர்கொள்ளுமா கொழும்பு?

OruvanOruvan

இலங்கைக்கான அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரையீசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் இந்த தவகலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி இப்ராஹீம் ரையீசி தலைநகர் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளும் அழைப்பு தமக்கு கிடைத்ததாக நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இப்ராஹீம் ரையீசி கால அட்டவணை இறுக்கமாக உள்ள போதிலும் அவரின் பயணம் ஈரானுக்கு முன்னுரிமையாக இருக்கும் என அமிர் அப்துல்லாஹியன் கூறினார்.

இலங்கையுடன் ஈரானின் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒருகட்டமாக அமிர் அப்துல்லாஹியன் கடந்த திங்கள்கிழமை கொழும்பு வந்தடைந்தடைந்ததுடன், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் பேச்சுகளை நடத்தியிருந்தார்.

நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் இலங்கை

பிரதமர் தினேஸ் குணவர்தனவுடனான சந்திப்பில் ஈரானிய நாணயத்தில் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

“பூகோள அரசியலில் ஈரானும் அமெரிக்காவும் பரம எதிரிகளாகும். பலஸ்தீன விவகாரத்தில் இந்த முறுகல்கள் மேலும் முற்றியுள்ளன. இந்த நிலையில், ஈரானுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து அமெரிக்கா கவலை கொண்டிருக்கும்.

இலங்கையின் அழைப்பை ஏற்று ஈரானின் ஜனாதிபதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டால் அது இராஜதந்திர ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை இலங்கைக்கு ஏற்படுத்தும்“ என சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரானிடம் இருந்து எரிபொருள் நலனை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை மறைமுக நகர்வை மேற்கொண்டுள்ள போதிலும், அது பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இலங்கையின் இந்த வெளிப்படையான அழைப்பை அமெரிக்கா உற்று நோக்கியுள்ளது.

இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற காலம்தொட்டு இன்றுவரை அமெரிக்காவும் ஈரானும் எதிரி நாடுகளாகவே உள்ளன. அதேபோன்று மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கும் ரஷ்யாவுடன் இணைந்து ஈரான் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.