நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் 'எட்கா' உடன்படிக்கை: புதுடில்லியின் புதிய நகர்வு - இருநாட்டு வர்த்தகத்தில் புதிய மாற்றமா?

OruvanOruvan

2024-25 இற்கு இடைப்பட்ட நிதியாண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (Economic and Technology Cooperation Agreement - ETCA) கையெழுத்திட இலங்கை தீர்மானித்துள்ளது.

ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவின் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024 ஜனவரியில் இடம்பெற்ற 13ஆவது சுற்றுப் பேச்சுகளில் பெரும்பாலான விடயங்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் 14ஆவது சுற்று பேச்சுகளில் இலங்கை தரப்பில் எட்டப்பட வேண்டிய சில உடன்பாடுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

பா.ஜ.கவின் நகர்வு

சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய செய்தி நிறுவனமான மின்ட்(Mint) வெளியிட்டுள்ள செய்தியில், எட்கா உடன்படிக்கை இந்தியாவுககும் இலங்கைக்கும் இடையே இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும் என்பதுடன், ஒப்பந்தம் கையெழுத்திடும் விளிம்பில் உள்ளதாக கூறியுள்ளது.

ஒப்பந்தம் 2025 நிதியாண்டுக்குள் கைச்சாத்திடப்படும் என்பதுடன், இருதரப்பு பொருளாதார உறவில் ஒரு மைல்கல்லாக இது இருக்கும் என்றும் மின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடன் 1998ஆம் ஆண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை (free trade agreement india sri lanka - FTA) இலங்கை கைச்சாத்திட்டிருந்தது. அது 2000ஆம் ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் விரிவாக்கமாகவே எட்கா உடன்படிக்கை இருக்கும்.

எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பாரதி ஜனதா கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

தேர்தலுக்கு முன்னர் எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்தும் புதுடில்லி தமது அவதானங்களை செலுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது..