வீட்டுப் பணியாளர்களாக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்து பரிசீலனை: உரிய பிரேரணையை தயாரிக்குமாறு ஆலோசனை

OruvanOruvan

House maid foreign

வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு பெண்களை வேலைக்கு அனுப்புவதனை முற்றாக நிறுத்துவதற்கான முன்மொழிவுகள் மற்றும் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாகத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் பல்வேறு துஷ்பிரயோகங்கள், இன்னல்களுக்கு முகம்கொடுக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

பெரும்பாலானவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி நாடு திரும்பியதுடன். சில பெண்கள் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.

இந்த பின்னணியில் பெண்களை வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் நடைமுறையை நிறுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த நடைமுறைக்கு பதிலாக அதிக ஊதியம் பெறும் திறமையான வகைப் பணிகளில் வெளிநாட்டு வேலைகளைத் தேடுவதற்கு பெண்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

இதன்படி, 10 வருடங்களுக்குள் வீட்டுப் பணியாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்தும் வகையில், அனைத்து தரப்பினரையும் இணைத்து உரிய பிரேரணையை தயாரிக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சர்வதேச தரத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு மாத்திரம் அனுமதி

இலங்கையிலிருந்து பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கடந்த வருடம் அறிவித்திருந்தது.

அத்துடன், சர்வதேச தரத்திலான பயிற்சி பெற்றவர்களை மட்டுமே வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், இலங்கைப் பெண்களுக்கு வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதற்கான உயர்தரப் பயிற்சிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

கட்டணம் குறைப்பு

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான கட்டணத்தை குறைப்பதாக சவுதி அரேபியா கடந்த மாதம் அறிவித்தது.

இதன்படி, இலங்கைக்கான கட்டணம் 15,000 ரியாலில் இருந்து 13,800 ரியாலாக குறைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பெண்கள் சவூதி அரேபியாவுக்கே வீட்டுப் பணியாளர்களாக செல்கின்றனர். வறுமையின் நிமித்தம் பணியாளர்களாக செல்பவர்களுக்கு இந்த கட்டண குறைப்பானது மேலும் சிக்கலையே ஏற்படுத்தும்.